Home
வித்யாரம்பம்

சீனிராஜ் சிவகுமார்


சிவகாசி வட்டாரத்தில் படிக்காத கிராமத்து சரஸ்வதியொருத்தி பள்ளி செல்லும் வயதை சில வருடங்கள் கழித்தே எட்டப் போகும் தன் புதல்விக்குச் சொன்னது:

பாடல் 1:

குறுகிக் கொள்ளும் குளிர்கால நுரையீரல்.
விறகும் தள்ளும் ஒளியோடு புகைசேர்த்து.
பிறகும் வாழ்தல் பேரின்பம் தானேடீ
அருகில் வாம்மா அபரஞ்சி ராசாத்தீ

பாடல் 2:

எனக்கென பூமியில்
என்வழி வந்த நீ
தனித்தொரு முத்திரை
தடபுடல் இன்றியே
தினம் தினம் பதிப்பதென்
துளைச்செவி தொடும் வரை
உனக்கென வாழ்வதே
உயிர் பெறும் உன்னதம்

பாடல் 3:

காமன் இருட்டில் காட்டியது நிறமாலை.
தேமல் விழுந்த தெய்வீகச் சுவர் மீது
மாமன் மகனின் முகச் சதுரம் மேல் மாலை.
ஈமச் சடங்கில் என்னிடையுன் ஆசனமே.

பாடல் 4:

அப்பனின் அஸ்தியை
அள்ளினாய், முகத்திலே
ஒப்பனைப் பொருளென
அப்பினாய் துப்பினாய்
வெப்பமோ நெஞ்சிலே,
வாரிதி கண்ணிலே.
சப்பரக் கடவுளாய்
சுமக்கிறேன் அமரனை.

பாடல் 5:

காலை எழுந்தால் கவலைக்கும் எமகண்டம்
ஆலை நுழைந்தால் அடுத்ததினம் கறிச்சோறு
மாலை விழுந்தால் மகளே உன் தோளில்தான்
வேலை குழந்தாய் விதவைக்குக் கணவனடி

பாடல் 6:

காகிதம் உருட்டுவேன்,
களைச்செடி பிடுங்குவேன்,
சாகசம் செய்வதா
சாணியைப் பொறுக்குதல்?
தேகமும் திராணியும்
தேய்கிற வரையிலும்
ஆகுதி ஆகுமே
அத்தனை செயல்களும்

பாடல் 7:

சண்டு வத்தல் சாவகாசமாய்ப் பொறுக்கிக்
கொண்டு போனால் கொடுப்பானே கருப்பட்டி.
பண்டமாற்று பருத்திக்குப் பஞ்சுமிட்டாய்,
உண்டு வாழ்வாய் உலகத்தில் நீ ராணி.

பாடல் 8:

நெருஞ்சிமுள் கம்பளம்
நெடுகவே கிடப்பினும்
அரசியின் செருப்புகள்
அடுத்தநாள் கிடைப்பினும்
இருக்கவே இருக்கிறேன்
அதுவரை நடக்கவே.
இருகரம் பற்றுவாய்
இருத்துவேன் இடுப்பிலே.

பாடல் 9:

ஆசி வழங்க ஆகாய வாசிகளும்
ஈசன் திருமால் இந்திரனும் சந்திரனும்
யோசித்திருப்பர், யோகங்கள் கைகூட
வாசி, கல்வி வருங்கால வைப்புநிதி.

பாடல் 10:

தேவதை அம்சமே,
தேர்வுகள் தினசரி
ஆவலாய் வைக்குமே
அகிலமும் வகுப்பறை.
காவலும் கயமையும்
கூடிய பெருஞ்சிறை.
பாவனூர் பள்ளியில்
படிப்பது கொஞ்சமே...

2008-09
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us