Home
திருடர்கள் முன்னேற்றக் கழகம்

சீனிராஜ் சிவகுமார்


கோவில் நமக்குள்ளே கடவுள் இருக்கின்றார்
தேவையில் லாமல் தெருக்கோடி போவதென்ன?
பூவும் பழமும் புனஸ்கார வழிமுறையும்
பாவம் கழுவுமென்று பகல்கனவு காண்பதென்ன? 1

கோவிலுக்கே போகாமல் கட்டுக்குள் வாழ்ந்தாலும்
ஆவி மலர்ந்திருந்தால் அம்மாந்தர் ஆத்திகரே.
கோவிலுக்குப் போய்வந்தும் குடிகெடுத்து வாழ்ந்திருந்தால்
காவி அணிந்தாலும் கைகூப்பும் நாத்திகரே. 2

பொருள்வேண்டி வழிநெடுக பிச்சை எடுப்பவனே
பரவாயில்லையயய்யா, பழனி கடைத்தெருவில்
அருள்வேண்டி வருவோரை அயோக்கியர்கள் வரவேற்பர்
திருவாய் மலர்ந்தருள்வர் தீர்ந்துவிடும் சட்டைப்பை. 3

நித்திய அமைதிநாடும் நீண்ட பயணத்தில்
உத்தமனைத் தேடித்தான் ஊருக்குள் தொலைவீர்கள்.
பத்துரூபாய்ப் பொருளுக்குப் பாதிசொத்தை இழப்பீர்கள்
சுத்தமில்லா விடுதியறை சூப்பர் டீலக்ஸாமே? 4

இருந்தாலும் குறைந்தபட்சம் எம்பெருமான் கொடுத்தருள்வான்
கரன்சித்தாள் கட்டன்று, கலிகால ஓசைக்குள்
வரமாகப் பேரமைதி வருந்தாதீர் பக்தர்காள்
கிரிவலமே போனாலும் கிடைக்காத தெல்லாமே. 5

கடவுளுக்கு உருவமில்லை, கழுத்தில் அரவமில்லை.
எடைபார்த்து வைக்கும்பொன் எவனிடமோ பிடுங்கியது.
குடமுழுக்கு செய்யும்முன் குளிப்பாட்டு உள்ளத்தை.
விடைதேடி அலைகின்றோம், வினாவென்ன? தெரியாது. 6

அடையாளம் இருந்தாலும் அருவமாயி ருந்தாலும்
கிடையாது என்றில்லை கிடக்கின்றான் எங்கெங்கோ.
கடவுள் கடந்திருப்பான் கண்டாயா உள்ளிருப்பான்,
மடங்கள் இருக்குமிடம் மட்டும் தவிர்த்திருப்பான். 7

நஞ்சம் நினைப்பெல்லாம், நாயன்மார் வரி உதட்டில்.
அஞ்சாமல் துஷ்டனாகி ஆழ்வாரைப் படிப்பதென்ன?
பஞ்சடைத்த அகக்காதில் போதனையின் பயனென்ன?
நெஞ்சம்தான் சிவன் யேசு நமக்குள்தான் அரி அல்லா. 8

பரிகாரம் செய்துவிட்டுப் பகுத்தறிவு பேசுபவன்
வருங்காலம் தெரிந்துகொள்ள வரவழைப்பான் ஜோதிடரை.
கரம்குவித்துச் சிரம்நனைப்பான் கவனம்அவன் குள்ளநரி.
திருடர்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவனவன் 9

பகற்கொள்ளை யடிக்கின்ற பகுத்தறியும் திராவிடர்கள்,
எகத்தாளப் பேச்சுடனே இறைவணங்கும் ஆரியர்கள்
சகித்துக்கொள் என்செய்ய? சைத்தான்கள் இருவருமே.
மகேஸ்வரனோ உனைச்சுற்றி, மலைமேலே தேடாதே. 10

ஆகஸ்ட் 2009
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us