Home
பாடத்திட்டம்

சீனிராஜ் சிவகுமார்


இது பள்ளிக்கூடப் பாடத்திட்டம் அல்ல


தேநீர்க் கடையில் தினசரி வாசித்து
ஞானம் பெறமுயன்ற ஞாபகம் - ஏனோ
தினங்கள் வருஷங்கள் தாண்டிவந்த பின்னும்
நினைத்தாலே தித்திக்கும் நெஞ்சு. 1
அரசினர் நூலகத்தில் அத்துவானக் காட்டில்
அரிஓடைக் கப்பால் அமரர் - உறங்கும்
தரையடி மெத்தையில் தாமரைப் பூவில்
சரஸ்வதி உள்ளாள் சிறந்து. 2
பிறப்புக்கும் கூற்றுக்கும் பாலம் அமைக்கச்
சிரிப்புக்குத் தான்உண்டு சக்தி - புரிந்தவர்
உள்ளத்தில் பொங்கிவரும் ஊரறியாப் புன்சிரிப்பால்
முள்ளும் மனைவி மடி 3
விருப்பம் இருந்தால் வகுப்பறை வேண்டாம்
பருத்திச் செடிநிழலே போதும் - கறைகழுவி
ஞானம் பெறநினைத்தால் ஞாலமே நாள்தோறும்
நானா விடுப்பென்றேன் சொல்? 4
நிழலே கடிகாரம் நேரம் கணிப்பார்
உழவே பெருங்கல்வி ஊரில்- விழிகளால்
உள்ளத்தைத் தாத்தா உளவியல் மேதைபோல்
தெள்ளத் தெளிவாக்கு வார். 5
புலன்கள் மதிநுழையப் போட்டுவைத்த வாய்க்கால்கள்.
கலன்நீர் எனநிரம்பும் கல்வி - தலைகசக்கிக்
கேள்விகேள் உள்ளத்தில் கீற்றாய் ஒளிபிறக்கும்.
தாள்பணியும் சேவகனாய்த் தீர்வு. 6
அரிச்சந்தி ரன்கதையால் அத்தனை பேரும்
சிரவணன் போலே சிலரும் - பரிணாமம்
பெற்றிருந்தால் காந்திஜிக்கள் பார்க்கும் இடமெல்லாம்
சுற்றித் திரியாத தேன்? 7
புத்தகத்தில் கொஞ்சமுண்டு பேரறிவு, பட்டாசுச்
சத்தமா இன்னிசை சொல்லுங்கள்? - பொத்திவைத்தால்
பூங்காற்றும் மூச்சுமுட்டும், பூட்டாதீர் சாளரத்தை.
நீங்கட்டும் தூசு நெடி. 8
திருக்குறள் கற்றுத் திருந்தியவர் இல்லை.
பரீட்சை தினத்தோடு போகும். - இருக்கிறது
வாழ்க்கை அதுதான் வகுப்பெடுக்கும் எல்லோர்க்கும்.
ஆழ்ந்து பயின்றால் அறிவு. 9
பட்டும் படாமலும் பற்றற்று வாழ்ந்திருந்தால்
எட்டிக்காய் தித்திக்கும் என்பேனே - பட்ட
மரம்போல் நடமாட மாமேதை அல்லேன்
இறையருளே இக்கல்வி தா. 10
2007

Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us