Home
சூரியன்

சீனிராஜ் சிவகுமார்


1

இயற்கை தயாரித்த
ஹைட்ரஜன் குண்டு நான்.

நானில்லாவிட்டால்
நீங்கள் இல்லை.
நான் கோபப்பட்டாலும்
நீங்கள் இல்லை.

சித்திரையில்
என் பொய்க்கோபம்
காதலில் பிரிவு.

மார்கழியில்
புவியுடன் என்
அமைதி உடன்படிக்கை
இதழ்களில் முத்தம்.

மழைநாட்களில்
இருட்டடிப்பு
செய்யப்படுகிறேன்.

2

என் புறஊதாக் கைகளைத்
தடுக்கும்
ஓசோன் அடுக்கு
உங்கள் பாதுகாப்பு அரண்.

பாதுகாப்பு அரணில்
ஓட்டைபோடும்
அறிவாளிகள் நீங்கள்.

3

பூமி என்
அகச்சிவப்புக்கதிர்களின்
சிறைச்சாலை.

உங்கள் புகைபோக்கிகளின்
பெருமூச்சுகளே
கைது செய்யும் திருடர்கள்.

பூமியின் காய்ச்சலுக்கு
நீங்களும் நானும் காரணம்.

4

பகலில் கிழக்கிலும்
இரவில் மேற்கிலும்
உதிக்கிறேன்.

அண்டார்க்டிகாவிலும் ஆர்க்டிக்கிலும்
ஆண்டிற்கு ஆறுமாதங்கள்
எனக்குத்
தடையுத்தரவு.

என் ஒன்பது குழந்தைகளுக்கும்
உஷ்ணப்பால் ஊட்டுகிறேன்.

கிரகம் என நீங்கள்
ஏற்க மறுக்கும்
ப்ளுட்டோ சவலைப்பிள்ளை

5

சில சமயங்களில்
உங்களைவிட மரங்களை
எனக்குப் பிடித்திருக்கிறது.

நீங்கள் கறுப்புக்குடை
விரிக்கிறீர்கள்.
அல்லது
பச்சைக்குடைகளின் கீழ்
ஒதுங்குகிறீர்கள்.

பச்சைக்குடைகள்
என் நிழலில்
நிற்கின்றன.

வெயில்
என்
நிழல்.

6

நான்
உங்கள் ஆசான்.
உலகம்
உங்கள் வகுப்பறை.

இதோ உங்களுக்கான பாடம்:

அனுபவியுங்கள் வாழ்க்கையை
துன்ப இடைச்செருகல்கள் இருந்தால் கூட.

உண்டு
என்னிலும்
இருண்ட பிரதேசங்கள்.

7

விடியலைத் தேடாதே,
நீயும் சூரியன் தான்

8

வானம் கறுத்திருந்தால்
இரவாகவோ கார்காலமாகவோ இருக்கலாம்.

கவலைப் படாதே நெஞ்சே

இரவும் மழையும்
தேவையென்பதோடு...

எழுநூறு கோடி ஆண்டுகள்
இன்னும் இருப்பான்
சூரியன்.


டிசம்பர் 2007.

குறிப்பு:
சூரியனில் இருண்ட பிரதேசங்களை Sunspots என்று அழைப்பார்கள். பதினோரு ஆண்டுகட்கொரு முறை எண்ணிக்கையிலும் பரப்பளவிலும் அவை மாறுவதையும் விஞ்ஞானிகளின் விழிகள் பார்த்திருக்கின்றன.
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us