Home
சந்தனமும் சாக்கடையும்

(என் சாக்கடை சிந்தனைகள்)

சீனிராஜ் சிவகுமார்


கட்டளைக் கலித்துறை

பாசனக் கல்வியைப் பெற்றவன் மட்டுமே பூமிபிள்ளை
மாசுநீர் வாரியம் உள்ளஊர் மண்மிசை வைரஒளி
நாசமாய்ப் போவது நல்வினை கண்டதும் தூற்றுமினம்
பேசினால் போதுமா வேந்தரே மேன்மை செயல்படலே 1

பல்லவர் ஆங்கில வல்லவர் பார்வை அகன்றிருக்க
கல்லணை கட்டிய சாதியின் சென்னைத் தலைநகரில்
இல்லிட(ம்) வாணிப சிந்தனை ஆற்றைக் குறுக்கியதால்
சொல்லிய வண்ணம் சகதிநீர் எங்கணும் தேங்கியதே 2

ஓட்டத்தைக் கூட்டும் ஒருநதி யாரால் முடங்கியது?
கூட்டத்தின் கார்நிறப் பாவங்கள் சேரவா ஆறுகுளம்
ஆட்டத்தின் நாயகன் அன்றொரு நாளில் அமைத்துவைத்தான்?
வீட்டுக்குள் அந்நதி யாரால் நுழைந்தது வான்மழையே? 3

நூதன சாதனம் நாட்டில் அனைவரும் பெற்றிருந்தும்
வேதனை நிச்சயம் சாக்கடை போகும் வழியடைத்தால்
ஆதன வாயின்றி ஆறடி யாக்கை இருக்கிறதா?
வீதிகள் வீணே, வடிகால் மறந்த மனுகுலமே 4

போர்வாள் இழந்த பொழுதுதான் முற்றுகைச் செய்திவரும்
போர்வை இழந்த பொழுதுதான் அய்யோ குளிர்நடுக்கும்
நேர்மை குறைந்த நகருள்தான் வெள்ளம் பெருகிவரும்
கூர்மை இழந்த மதியினால் கெட்டாய் குவலயமே 5

ஈரக் கடவுளைச் சீண்டிய இல்லம் அழிகிறது
ஊரில் அவனலை பாய்ந்து மனைகளைச் சூழ்கிறது
நீரின் நிலத்தில் நகரம் நிறுவுதல் தெய்வகுற்றம்
ஏரி புனலற்றுப் போயினும் இந்திரன் வாழ்விடமே 6

வேண்டிய போதும் விரிகதிர் சுட்ட நிலப்பரப்பில்
பாண்டியன் தோண்டிய நீர்நிலை நாளையும் வேண்டுமய்யா
ஆண்டியின் தாகம் தணித்தவன் ஆண்டவன் தூதனய்யா
நீண்டது நேற்றின் பெரும்புகழ் இன்றின் அரியணையே 7

வானம் திறந்தால் வயல்வெளி தெப்பக் குளமதனைத்
தானாய் வடித்து வெளியேற்றும் தோட்டத் தொழில்நுணுக்கம்
ஏனோ தமிழகச் சிற்றூரை இன்னும் அடையவில்லை
மேனா மினுக்கல் கலையெனும் கோலத்தில் சேர்கிறதே 8

கல்வி நிலையங்கள் கண்டேன் அறிஞர்கள் யாருமில்லை
வில்வ மரத்தடி ஏழை விஷயம் தெரிந்திருந்தான்
ஒல்லி உடம்பில் பிணியாளன் உண்மை அறிந்திருந்தான்
செல்வச் செழிப்பில் சுகித்தவன் எண்ணம் தரித்திரமே 9

யோசனை தூங்கும் அரசின் பொறியியல் புத்தகத்தில்
ஆசனம் தேயும் அலுவலர் தேகம் அமர்ந்தமர்ந்து
தேசியம் பேசி தெருவளி மண்டலம் மாசுபடும்
காசிகள் காஞ்சிகள் ஆயிரம் ஆனால் கடவுளெங்கே 10

பாசனக் கல்வி பயின்றவன் மட்டுமே பூமிபிள்ளை
மாசுநீர் வாரியம் உள்ளஊர் மண்ணில் புனிதபுரம்
நாசமாய்ப் போவது நல்வினை கண்டதும் தூற்றுமினம்
பேசினால் போதுமா வேந்தரே ஆக்கலும் உம்தொழிலே 11

date: 24-12-2015
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us