Home
தேய்பிறை உலகம்

சீனிராஜ் சிவகுமார்

1. தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியும் அமுதசுரபி மாத இதழும் இணைந்து நடத்திய வெள்ளி விழா மரபுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை. (25-ஆகஸ்ட்-1995).
2. வகுப்பறை, மாணவன் போன்ற படிமங்கள் எனக்கு எப்போதும் பிடித்தவையாக இருந்திருக்கின்றன. அவை இதிலும் உண்டு.

அடர்நைட்ரிக் அமிலநெடி போதும் போதும்.
அதை மறக்க என் கண்கள் நிலவில் மோதும்.
படரொளியில் தார்ச்சாலை நாகம் போலே
வளைந்துசெல்லும் காட்சியிலே இதயம் சாகும்.
இடர்கள்சூழ் நேரத்தில் என்னைத் தேற்றி
அழகாகக் கவிபாட வைப்பவள் நீ
கடல்கள்சூழ் உலகத்தீர் இவளை விட்டா
கரன்சிகளின் இருட்டுக்குள் தொலைந்து போனீர்? 1

ரகசியமாய்க் கிச்சுகிச்சு மூட்டும் தென்றல்
ராத்திரியில் எனையெங்கோ கொண்டு செல்ல
சுகநிலவோ மேனியிலே பாலை ஊற்ற
சொர்க்கமடா இக்காட்சி காண்பதற்கு
முகக்கண்கள் போதா என் அகத்திலுள்ள
மாகவிதைக் கண்களையே திறந்து வைத்தேன்
யுகம்யுகமாய்க் கவிபலவே பாடவைத்து
யாமத்தில் நிலவாசான் நடத்தும் பாடம் 2

வான்பள்ளிக் கூடத்தில் நிலாதான் ஆசான்.
விண்மீன்கள் தானங்கே மாணவர்கள்.
கூன்தள்ளி விட்டதோ நம் நிலாப் பாட்டிக்கு?
குளிர்நடுக்கி மறைந்தாளோ மேகத்துள்ளே?
ஏன்தள்ளி நிற்கிறீர்கள்? வந்தென்னோடே
ஏகபோக சுகமெல்லாம் அனுபவிப்பீர்
தேனள்ளிச் சாக்கடையில் தெளித்தாற்போலத்
தோழர்கள் வாழ்க்கையைத் தொலைத்து விட்டீர். 3

இந்தியாவின் பணவீக்க விகிதம் போலே
இளைத்திளைத்து வளர்கின்ற வெண்ணிலாவே,
நொந்துபோகும் என்னுள்ளம் அமாவாசையில்
நோகடிக்கச் செய்துவிட்டு மறைவதெங்கே?
சொந்தமற்ற அனாதையாய் உணர்கின்றேனே
சொர்க்கநிலா வாராத நாட்களெல்லாம்.
மந்தமற்ற நிலைகாண வேண்டுமென்றால்
மனத்திற்கு நிலாதேவை நிலாதான் தேவை 4

வானத்துக் கொடைவள்ளல் வாரித் தந்த
வெண்காசுக் குவியலையே தவறி யெங்கும்
ஞானமின்றிச் சிதறடித்த திருவோட்டைத் தான்
ஞாலமின்று பிறைநிலவாய் வழங்குதென்று
மௌனமாக சிந்தித்துத் தெரிந்து கொண்டேன்.
மனத்துள்ளே கவிமலர்கள் மலரக் கண்டேன்.
தேனமுதும் தெவிட்டுமப்பா, தெவிட்டாதிந்தத்
தண்ணிலாவின் ஒளியலைகள் நெஞ்சுள் என்றும். 5

நீதேய்ந்தால் வளர்கிறதே என்னுள் சோகம்.
நீவளர்ந்தால் தேய்கிறதே அந்தப் பாவம்.
ஏதேது கவிஞனாக என்னை ஆக்கி
ஏழிசையின் ஸ்வரம்போல இனிப்பாய் போலும்.
பூதாவித் தேனருந்தும் வண்டுகள் போல்
புதுச் சொல்லில் உலகினையே மொய்க்கச் செய்வேன்.
மேதாவி நானல்லேன் என்ற போதும்
மேமாத முழுநிலவே கவிபடைப்பேன். 6

(வேறு)

பார்த்துவா நிலவுப் பெண்ணே
பாதையில் நெருஞ்சி முட்கள்.
ஈர்த்ததே வெளிச்ச வெள்ளம்,
இவனது எழுதுகோலோ
வார்த்தது கவிதைப்பூவை
வாசனை உணர்ந்தாயா நீ?
போர்க்களப் புறாவைப் போலப்
பொன்னிலா வானில் நின்று 7

சுற்றிலும் மீன்கள் சூழச்
சுதந்திரம் இழந்ததாலே
முற்றிலும் வருத்துதம்மா
முகத்திலே சுருக்கமம்மா.
வற்றிய முகத்தில் கூட
வாலிப அழகைக் கொண்டென்
நெற்றியை நெளியச் செய்யும்
நிலாமகள் வானதேவி. 8

காற்றிலா நிலவை உன்றன்
கண்களால் சுவாசி தோழா.
ஆற்றுநீர் சலசலக்கும்
ஏகாந்த இரவிலென்னுள்
ஊற்றெனப் பொங்கும் பாக்கள்
உள்ளத்துள் எங்கும் இன்பம்
கூற்றுவன் வந்தாலும் நான்
குளிர்நிலா காணச் சொல்வேன். 9

விண்மீன்கள் நிலா உதிர்த்த
வேர்வையோ என நினைத்தே
என்பேனா பாடும் பாட்டில்
ஏக்கங்கள் தொலைந்து போகும்.
பொன்தட்டில் இருந்த சோற்றுப்
பருக்கைகள் சிதறி எங்கும்
விண்மீன்கள் ஆயிற்றோ சொல்?
பொன் தட்டென நிலாவைத் தான் 10

சொல்கிறேன் நண்பா ஏனோ
சோகமே வடிவமாகி
மல்கிய கண்ணீருக்குள்
மகிழ்ச்சியைத் தேடுகின்றாய்.
அல்லவை மறப்பதற்காய்
ஆகாயம் பார்ப்பாய் தோழா.
அல்லலோ மாய்ந்து போகும்.
அந்நிலா உதவி செய்யும். 11

பவுர்ணமி நிலவைக் கூடப்
பெருநகர் வசிக்கும் மக்கள்
கவனிக்க நேரமில்லை
கவலையில் பாடுகின்றேன்
அவசரம் அவர்கள் வாழ்வை
அமாவாசை ஆக்கிவைத்துப்
புவியிலே உலவ விட்டுப்
புரிந்ததே கொடுமை நோயை. 12

(வேறு)

நிலாமகளே உனைக்கண்டு மலரும் பூக்கள்
அல்லிமட்டும் என நினைத்தாய் என் நெஞ்சும் தான்.
பலாச்சுளையும் பாகற்காய் ஆனதம்மா
பவுர்ணமியில் உன்னழகைச் சுவைத்த பின்னே.
சிலர்மட்டும் சுகிக்கின்ற நிலவே உன்னைச்
சிறைப் பிடிக்க முயல்கின்றேன் சொல் வலையில்
ஒளிக்கடனைப் பரிதியிடம் பெற்று வாழும்
உயரத்தில் அமைந்திருக்கும் வளரும் நாடே. 13

(வேறு)

அடைப்புக் குறிபோன்றே ஆகாயம் மீதில்
மடங்கிய மஞ்சள் நிலவு - படுத்துக்
கிடந்ததைக் கண்டேன் கவிபிறக்கப் பேனா
நடந்தது தாளில் நடுங்கி. 14

வெளிச்சநீரை வீதிகளில் வெண்ணிலா பாய்ச்சிக்
குளிக்கவைத்த நேரம் கவிஞன் - களித்தேன்
அளிக்கிறேன் பாடல்கள் ஆனந்தம் கொள்ளத்
தெளிக்கிறேன் தேன்போல் தமிழ். 15

மரக்கிளையில் உட்கார்ந்து மாணவன் என்னுள்
சுரக்கவைத்தாய் வற்றாச் சுகத்தை - கிறக்கம்
பிறந்நது வான்மதியே பின்முதுகோ கூனல்
மறந்தது துன்பம் மனம் 16

மணலில் ஒளிபொழிந்து மண்ணில் புரண்டுப்
புனலில் குளிப்பாய் பொலிந்து - தணலொன்று
மூண்டதே உன்முகம் முன்வந்து நின்றதும்
மாண்டதே துன்ப மனம் 17

துன்ப மனம்மாண்டுத் தோன்றியதே இன்பமென
அன்பனும் கொள்கிறேன் ஆற்றலை - முன்பின்
தெரியாத குளத்தில் துணிந்தே இறங்கும்
சரியாத வீரச் சுடர். 18

சரியாத வீரச் சுடரிவன் கேட்பேன்
புரியாத ஐயப் புதிர்கள் - விரிகடல்
உன்றன் முழுமதி உற்றுநோக்கிப் பொங்குவதேன்?
நின்று பதில்கள் நவில் 19

கடலென்ன உன்னுடைய காதலனா சொல்லேன்?
உடல்துள்ளப் பொங்கும் உயரே - நெடுவானில்
காதல்பெண் உன்றன் கவின்முகம் கண்டபின்
போதையில் தன்னுள்ளம் பொங்கி. 20

மாத விலக்கால் மறைந்துகொள் கின்றாய்நீ
ஆதலால் அந்நாள் அமாவாசை - போதும்
குறும்பான கற்பனைக் கூற்றுகள், நெஞ்சின்
நரம்பினுள் நிற்கும் நிலவு 21

வெண்ணிலவைக் கண்டதும் வேலை நிறுத்தந்தான்
கண்ணிமைகள் செய்வதைக் கண்டீரோ? - விண்ணில்
விழுந்த மனமே விழிகளை மீட்க
வழிகளைச் சொல்க விரைந்து. 22

ஒளிமுகம் கொண்டோரின் உள்ளத் தழுக்காய்
ஒளிந்துசெல்லும் பெண்ணுன் முகத்தில் - தெளிவாய்க்
கறுத்துத் தெரிவதேன்? காரணம் சொல்க
வருந்தியே கேட்டேன் வினா. 23

(வேறு)

நகரத்து விளக்கொளியில் இருட்டு வாழ்க்கை
நடத்துகின்ற நண்பர்கள் நிலவைக் கண்டால்
சிகரத்தை விட்டாநாம் பள்ளத் தாக்கில்
சிறகொடிந்து பலநாட்கள் கிடந்தோமென்று
பகர்ந்திடுவர் புலம்பிடுவர் நெஞ்சுக்குள்ளே
பலவாறு கதறிடுவர் அறிவேன் நானும்.
தகர்ந்ததேநல் அமைதியென அழுவோர் இன்றே
தண்ணிலவு பாருங்கள் சுகங்கள் உண்டு. 24

1995
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us