Home
நாகரிக நரகம்

சீனிராஜ் சிவகுமார்


நாகரிகத் தேனிலின்று நஞ்சைத் தூவி
    நன்றாக அருந்துகின்ற கொடுமை பார்மின்.
மோகவிதை மனவயலில் விதைத்து விட்டு
    மானமெல்லாம் போனபின்னே அழுகின் றோமே.
தேகமெலாம் பூட்டாமல் பலரும் பார்க்கத்
    தேவதையர் தெருநாயாய்த் திரியும் போது
சாகமனம் துடிக்கிறது ஏன்தான் இந்தச்
    சீர்கெட்ட உலகுவந்து பிறந்தோ மோநாம்?

திருமணமே முடிக்காமல் அன்னை யா(க்)கித்
     தெருவோரம் குழந்தையை வீசிச் செல்லும்
இருண்டமனப் பாவிகளே உங்க ளுக்(கு)
     இதயமென்ன கருங்கல்லா? மனந்து டித்தேன்
திரண்டதொரு கூட்டமிங்கு நவயு கத்தின்
     தந்தையென்று சொல்லிநமைக் கொன்ற ழிக்க!
வறண்டமண்ணில் விதைத்துவிட்டு வானம் பார்க்கும்
     விவசாயி போல்நன்மை தேடு கின்றோம.

காவியுடைக் காமுகர்கள் பெருத்த பின்னே
     கண்களிலே தணல்சிவப்பு வழியு தம்மா
பாவியரின் பாவமெல்லாம் சுமந்து நிற்கும்
     பொருத்தமான சுமைதாங்கி நாட்டு மக்கள்
தீவிழியால் தீயோரைச் சுட்டெ ரித்து
     திருநாட்டு மண்ணிலவர் உயிரின் சாம்பல்
தூவியினி நாகரிகப் பயிர்வ ளர்க்கத்
     திடமான முடிவோடு நடைதொ டர்வோம்

தரணிசொல்லும் நாகரிக மென்ப தின்று
     தீக்குள்ளே நின்றிருக்கும் மெழுகு வத்தி.
மரணத்தின் விளிம்பினிலே நின்று கொண்டென்
     மனங்கலங்கச் செய்கிறதே என்ன செய்வேன்?
கிரணத்தைப்; பகலோன்நம் புவிக்க னுப்பக்
     கொண்டல்கள் அதைத்தடுத்து நின்றாற் போல
தரமான பண்பாடு நம்மைச் சேரத்
     தடையாக இருப்போர்தம் வாழ்வ ழிப்போம்

பண்பாடு பண்பாடென மேடை யெங்கும்
     பண்பாடி மறந்திடுவர் கீழி றங்கி
மண்மேடாய் ஆனதுநல் மாளி கையே
     மண்படகு நதியிலின்றுப் பயணம் போகப்
பொன்பூட்டிப் பூச்சூடி நிற்ப தைப்போல்
     பகட்டாக ஒப்பனைகள் செய்த வற்றைப்
"பண்பாடு" பெயரிட்டே அழைக்கின் றோம்நாம்
     புதைகுழிக்குள் அதுசெல்வதி னிக்கண் கூடு.

ஜூன் 1995
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us