Home
தொழிலாளர் தினம்

சீனிராஜ் சிவகுமார்

இந்த வசன கவிதை பூமியென்னும் புனித கிரகத்தில் வாழும் ஆலைப் பணியாளர்கள், சேலைப் பணியாளர்கள், சோலைப் பணியாளர்கள், பாலைப் பணியாளர்கள் என உழைப்பின் உன்னதத்தை உணர்ந்த அனைவருக்கும் அர்ப்பணம்.

1

நீ அரசனல்லன்.

ஆனால் உலகெங்கும் நடப்பது உன் ஆட்சி.

ஹெல்மெட் உனது கிரீடம்.

ஸ்பேனர் உனது செங்கோல்.

பிரபுக்கள் வந்தாலும் முடியாத காரியம்
நீ வந்தால் தான் முடிகிறது
அல்லது
தொடங்குகிறது.

உனக்கு வழங்கப்படும்
முக்கால் டம்ளர் தேநீரில்
மூன்று சொட்டு குறைத்தால்
எத்தனை பைசா லாபம் என்று கணக்குப் பார்ப்பார்கள்.
உன் வியர்வைத் துளிகளின் எண்ணிக்கை
உனக்குத் தெரியாது.

உனக்கெதிரான சிலரின்
பரிகாசங்கள் மொத்தமும்
உனக்குப் பாராட்டு விழா

மே தினத்தையும் சேர்த்து
வருடத்தின் அத்தனை தினங்களும்
தொழிலாளர் தினங்கள்.

2

கடவுளுக்கு அடுத்தபடி நீதான்

கி.மு. விலும்
கி.பி 2010 இலும் அப்படியே இருக்கின்றன
ஆடு மாடுகள்.

நீ அன்று மாடு மேய்த்தாய்.

இன்று மாடுகளுக்குப் புல்லும்
மனிதர்க்கு நெல்லும் வளர்க்க
யூரியா தயாரிக்கிறாய்.

நீர் நிலம் காற்று தீ ஆகாயம்
அனைத்தையும் அடக்கவும் ஆளவும்
அறிந்தவன் நீ தான்.

ஒரே ஒரு உயரழுத்தக் கொதிகலன் (high pressure boiler) போதும்
உன் திறமையைப் பறைசாற்ற.

3

நீ ஆயுதங்கள்
செய்யும் நிராயுதபாணி.

உன் மீது
நேரடியாகவோ மறைமுகமாகவோ
போர்த் தொடுப்பவன் கோழை.

4

நீ இப்படி என்பாய்.
அவன் அப்படி என்பான்.

அப்படித்தான் போலிருக்கிறதே என்றெண்ணி
அப்படியே ஆகட்டும் என்பாய்.

இல்லை இல்லை இப்படித்தான் என்பான்.

ஒருவன் வலமென்பான்.

இன்னொருவன் இடமென்பான்.

கடவுள் காட்டும் பாதை நேராக இருக்கிறது.

5

ஓவியனின் வண்ணக் கலவையை விட
உன் சட்டையில் படியும்
மசகு எண்ணெய்க் கறை உயர்ந்தது.

பேனா பிடிக்கும் என் போன்றோரை விட
சாணை பிடிப்பவன் உயர்ந்தவன்.

ஒரு கவிதைத் தொகுப்பை விட
உன் உபகரணப் பெட்டியால் (tool box)
உபயோகம் அதிகம்.

பீத்தோவன் இசை தாழ்ந்ததல்ல.
ஆனால் உன் பிள்ளைகள் உருட்டும்
பாத்திரங்களின் ஒலி உயர்ந்தது.

6

நீ பெருந்தன்மையானவன்.

துப்பிய எச்சிலுக்கு நிகரான கலைஞனையும்
அங்கீகரிக்கிறாய்.

உன் அன்றாடப் பதிவேட்டில் (log book)
உள்ள குறிப்புகளில்
இலக்கணப் பிழை கண்டுபிடிப்பார்கள்.

அவர்களிடம் சொல்:
அது மனித உடலில் மச்சம் மாதிரி அழகானது.
ஆனால் ஆபத்தில்லாதது.

7

நீ செய்யும் வேலை ஆபத்துக்குப் பக்கத்தில் இருந்தாலும்

ஒலிபெருக்கி வழியே
வெறும் ஐந்நூறு ஏக்கர் ஆலைக்குள்
பரவும் உன் சொற்கள்
ஊரையும் உலகையும் காப்பதனால்..

உன் ஒவ்வொரு வாசகமும் பொன்மொழியாகிறது.

நீ ஆசீர்வாதமாயிருப்பாய்.

ஆமென்.

10-அக்டோபர்-2010
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us