Home
மல்லிநாடு

சீனிராஜ் சிவகுமார்

பகுதி 1 - விளையாட்டு

ஆண்டாள் நடந்த தெருக்களில்தான்
ஆயிரம் ஆண்டுகள் போனபின்பு
மீண்டும் நடக்கிறேன் பாய்வதெல்லாம்
மிச்சம் இருக்கும் அவள் சொற்கள். 1

அம்மானை நாச்சியார் ஆடினளோ?
அந்த வயல்வெளி மேல்நாங்கள்
அம்மா விதித்த தடைமீறி
ஆடினோம் சின்னஞ் சிறு கிரிக்கெட் 2

இரண்டுபத்து ஓவர் விளையாட்டை
அப்போதே ஆடினர் எம் மக்கள்
கிரிக்கெட் விமர்சகன் ஏற்காமல்
காட்டுப் பயலெனிலும் இன்புறுவோம். 3

தென்னை மரந்தானே மட்டை
தயாரித்து நீட்டும் தொழிற்சாலை.
சன்னல் முகங்கள் பதுங்கவென்றே
சிக்ஸர் அடித்துச் சிலிர்ப்படைவோம். 4

மல்லிபுதூர் மல்லி அணியிரண்டின்
மேன்மை நிறைந்த விளையாட்டை
டெல்லியின் கோட்லா திடலென்ன
தேசத்தில் யாருமே கண்டதில்லை. 5

பகுதி - 2 - விவசாயம்

தாகம் தணிக்க உதவா
தனிஓடை மற்றும் அரிஓடை
ராகப் பெயர்கள் தெரியாத
என்தலைக்கு மேலே குயில்கூட்டம். 6

இலந்தைச் செடிகள் தலைகாட்டும்
ஈரம் குறைந்த கரைமேல்
சிலந்தி ரசித்து வலைகூட்டும்
சூரியன் பொசுக்கக் கதிர்நீட்டும் 7

தெலுங்குடன் தேன்தமிழ் இங்கே
துளசிச் செடிக்கும் புரியும்
அலந்தை மறந்தவூர் எம்மூராம்.
ஆந்திர ஊரின் தமிழ்ப்பதிப்பு. 8

கதிரவன் கொண்டனன் தாகம்.
குளத்துநீர் அத்தனை சொட்டும்
இதயமில் லாமல் அருந்தினன்
எங்கள்மேல் மேகமும் இல்லையே 9

கானலில் கண்களின் நீச்சல்.
கரிசலில் கால்சுடும் வெப்பமே.
வானிலே காற்றுக்குக் காய்ச்சல்.
விரிசல்கள் கண்டதே ஊர்க்குளம். 10

பனைமரம் கூட உலர்ந்துவிடும்
பங்குனிக் கோடை வருகை.
அனைவரின் ஊக்கமும் இங்கே
அரைஇன்ச் அளவேனும் கூடுதல் 11

அன்பர்காள் பூமியில் பச்சை
இருப்பதோ வேர்வைத் துளிபாய்ந்து.
நண்பகல் நேரத்து வேப்பமரம்
நட்டுவைத்த நல்ல நிழற்குடையாம். 12

காய்த்து இறுகிய கரத்தில்தான்
காடு திருத்தும் கலையுண்டு.
பேய்மழைக் காலம் முடிந்தவுடன்
பச்சை நிறக்கம்பளம் போட்டு

வரவேற்கும் உங்களை, அன்னையின்
வாஞ்சை நிறைந்த கிராமம்
சுருதிகூட்டி வண்டினங்கள் சேர்ந்திசைக்கும்
செம்பட்டுப் பூச்சிகள் ஊர்ந்திருக்கும். 14

மிளகாய் இனிக்கும் கதைகேளீர்
மத்தியான நேரத்துக் கம்மங்
களியுடன் சேர்ந்தால் எமக்குக்
கடைத்தெரு வெல்லமே வேண்டாம். 15

பகுதி - 3 - மல்லிநாட்டில் கல்வி

மிதியடி இல்லாமல் நின்றோம்
மிருதங்க வித்வான்கள் இல்லை
சுதிபாட யாருமில்லை, எங்களுக்கு
சூடான பூமிதான் நட்டுவனார். 16

கொப்புளம் பூத்தவுள் ளங்காலில்
கோட்டைக்குப் போகும் குதூகலம்
தொப்பை விழாத வயிறு
துவையலும் சோறுமே தேவாமிர்தம். 17

மாடுமேய்த்த வாத்தியாரைக் கண்டதுண்டு
மந்தையில் மாணவர்கள் கற்றதுண்டு
பாடம் படிக்க வகுப்பறைகள்
பார்க்கும் இடமெல்லாம் உண்டுஉண்டு 18

அரசினர் நூலகமும் எங்கள்
மலிவுவிலைப் பல்கலைக் கூடம்.
மரத்தடியில் வட்டப்பொற் காசுகளை
எண்ணித்தான் கூட்டலே கற்றோம் 19

இலைகளின் ஊடே பளீரென
ஒளிர்கிறான் சூரியன், எங்கோ
இலங்கையின் வானொலி கேட்கிறது
ஆசிரியர் ஊமைப் படநடிகர் 20

பள்ளியின் பின்பக்கம் ஓடைக்குள்
பாய்ந்தோடும் எங்கள் சிறுநீரே
வெள்ளம் வருகுது ஐப்பசியில்
வானம் பெருநீர் கழிப்பதனால். 21

பகுதி - 4 - வாழ்த்து

இடிபட்ட கோயிலை மேல்திசையில்
இஸ்ரேலே கட்டவில்லை, சிற்றூர்
மடிமீது பிள்ளையார் கோவில்
மறுபடியும் கட்டியகை எங்கள்கை. 22

யேசு கிறிஸ்து உரைத்தாற்போல்
எங்கள் ஜனங்களோ தேவனவன்
ஆசியைக் காணாமல் பெற்றவர்கள்
அந்த விசுவாசம் வேண்டுமய்யா. 23

மல்லி புதூர்அதைச் சுற்றியுள்ள
மற்ற கிராமங்க ளெல்லாமே
நல்வினை பல்வகை காணுமே
நாயகன் பார்வை படுகிறது. 24

இந்திய மல்லி புதூரிங்கு
ஐந்தரை லட்சம் முழுவதிலும்
சிந்தனை செல்வம் பெருகட்டும்
செந்நெல் குளங்கள் நிரம்பட்டும் 25

பின்குறிப்பு: 1. என் வழக்கமான நடையிலிருந்து மாறுபட்ட படைப்பு இது. நான் பாதிப் படைப்பாளிதான். வாசகர்கள் தாம் இந்தக் கவிதையில் மீதிப் படைப்பாளிகள். மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

2. ஆண்டவன் சித்தமிருந்தால் விருதுநகர் மாவட்ட கிராமங்களைப் பற்றி அவ்வப்போது எழுதுவேன்.

24-November-2010
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us