Home
ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா ஜீஸஸ் க்றைஸ்ட்

சீனிராஜ் சிவகுமார்

பகுதி 1

ஆண்டவரே விஸ்வரூபம் ஆறடிக்குள் எடுத்தீர்
மாண்டவரே இருக்கின்றீர் மனிதனாக நடித்தீர்
வேண்டியவை நியாயமெனில் வேண்டுவோர்க்குக் கொடுத்தீர்
மீண்டவர்கள் பலகோடி, மேட்டிமையைத் தடுத்தீர் 1

அப்பத்தின் தானியங்கள் ஆங்காங்கே விளைவதெல்லாம்
முப்பத்து மூன்றாண்டு மூச்சுவிட்ட உம்மாலே.
வெப்பத்தின் குறியீடாய் வானத்தில் பந்துகளை
எப்படிநீர் சுழலவைத்தீர் ஏழுநாளில் எம்மிறைவா? 2

புதுமேகம் வறட்சிக்குள் பொழிந்ததுபோல் நாசச்
சதிகாரக் கூட்டத்துள் சமாதானம் பேசும்
அதிகாரம் தந்தவரே, அனற்காற்று வீசும்
இதமாக ஏனென்றால் எமக்குள்ளே யேசு. 3

காலத்தை உண்டாக்கிக் காலமான கடவுள்நீர்
காலத்தின் முன்னிருந்தீர் காலத்தின் பின்னிருப்பீர்
ஆல் அத்தி புல்பூண்டும் ஆகாயம் கடல்விரிப்பை
நீலத்தில் தோய்த்தெடுத்தும் நீர்செய்தீர் நீர் செய்தீர் 4

மனிதர்கள் படைப்பென்னை மலைக்கவைத்த போது
மனிதரைநீர் படைத்தவிதம் மனதில் ஏற்றும் வேதம்.
உனதுமூளை மண்ணெடுத்து உயிர்ச்சிலைகள் திறக்க
மனிதமூளை சிலிக்காவில் மைக்ரோகண் திறக்கும் 5

களவாடும் மனிதகுலம் காப்பிசெய்து பழகியதே
உளவாடும் வேசிமக்கள் உலகில் அந்தி கிறிஸ்தவனின்
அளவான கைக்குள்ளே அடங்கிவிட்ட தூதர்கள்.
களிகூர நீர் இருக்க, கண்ணடிப்பர் சைத்தான்கள் 6

பகுதி 2

விவிலியத்தில் இல்லாத விவரங்கள் இல்லை
கவிநயத்தில் அதைவிஞ்சக் கவிஞர்கள் இல்லை
புவியிலிது புதிதென்று பகலிரவு முயன்று
சிவகுமாரன் எழுதுவது சிரிப்புக்கே எல்லை. 1

யேசுவின் ராஜாங்கம் யெருசலேம் தாண்டி
காசியிலும் கல்கத்தா கயத்தாறு வரைக்கும்
ஆசியுடன் நடக்கையில் அரசர்கள் மைக்கில்
பேச மேடை தேடுவது பெருங்கூத்து தானே? 2

மந்திரிமார் பிரதமர்கள் “மாண்புமிகு” அல்லர்.
சுந்தரிகள் அரசியலில் சோபித்தால் தாயா?
எந்திரங்கள் படைத்தவர்கள் இறைவனாவதில்லை.
சந்தேகம் வேண்டாமே கர்த்தர்தான் எல்லாம் 3

நடிகைக்கும் ஆலயங்கள் நம்நாட்டில் உண்டு.
முடிமட்டும் தலையிலிருந்த முன்னாளில் சேச்சே
நடிப்போரைப் பெரியோராய் நான் நினைத்ததுண்டு.
அடிப்படையில் பலம்பெற்றேன் ஆண்டவனே காத்தான் 4

வயதான சிறுபயல்கள் விளையாட்டுக் காட்ட
அயராமல் இருப்பதெல்லாம் அருள்நாதர் காட்டும்
உயர்வான வழிகளிலே ஊர்சேர நானும்
பயணங்கள் போவதனால், பாடுகிறேன் கானம் 5

வயதான பெரியோர்கள் வழிவிட்டு நிற்க
சுயம்தேடும் இளையோர்க்குச் சுகம்தானே கற்க?
பயபக்தி கொண்டிருக்கும் பெரியோரால் வளமை.
குயவர்கள் வனைவதுபோல் குடம்தானே இளமை? 6

ரவுடிகளின் சூடான ராத்திரிகள் எல்லாம்
சுவடுகளே இல்லாமல் சுகம்காணத் தானே?
சவம்போலக் கிடப்பவளே சல்லாபம் விற்றாய.;
சுவர்க்கத்தில் இடமேது? சொல்கின்றார் யேசு. 7

தவறான மனிதர்கள் தலைவர்கள் ஆகிச்
சவடால்கள் பேசுவது சாத்தானின் தூண்டல்;
புவிமீது கடைகோடிப் புல்லுக்கும் கூட
சுவிசேஷம் அறிவித்தல் சத்தியவான் வேண்டல். 8

பற்பசைக்கு வாய்திறக்கும் பகட்டான பெண்ணின்
கற்பிழந்த கதையெழுது காத்திருந்து வாங்கும்
அற்பர்கள் நிறைந்துள்ள அழகான பூமி.
நற்செய்தி என்றைக்கும் நகைப்புக்குள் ளாகும். 9

நீசர்கள் பத்திரிகை நிருபராக வந்தால்
ஏசுவையும் சிலுவையிலே ஏற்றிடுவார் அந்த
ஆசிதந்த கரங்களிலே ஆணிகளால் குத்தி
நேசிப்பீர் எனப் பதிப்பார் நாலுபக்கச் செய்தி 10

தேவனுக்கே இந்த கதி தடுமாறும் என் போல்
பாவலரின் கதியென்ன? பக்கபலம் இல்லாப்
பூவையரின் கதியென்ன? புறம்போக்கு மக்கள்
காவலரின் துணையோடு களவாடுகின்றார் 11

தேர்ந்தெடுக்கும் மக்களுக்குத் தெரிந்திடுமா என்ன?
யார் தடுப்பர்? துணிச்சலுண்டா? எவனிங்கே வீரன்?
ஊர்ந்துபோகும் விரியனைவிட ஒருபடி யாம் மேலே.
ஆர்ப்பரிப்பார் தலைநகரில் அரசியல் வியாதி. 12

கிருபையின் ஆட்சியின்கீழ் கிறுக்கர்கள் ஆட்சி
இருப்பதுவா? ஏமாற்ற இரண்டுமுகம் கொண்டு
சிரிப்பதுபோல் சிரிப்பவர்கள் சிந்தனையில் வஞ்சம்
மரிப்பதுபோல் மரித்தவனுன் மலரடியே தஞ்சம் 13

பாரதத்தின் தீவினைகள் பாதரசம் ஆகும்.
வாராயோ வந்துவிட்டால் விலகித்தான் ஓடும்.
யாரெவரோ அரியணையை இறுமாப்பாய்த் தேய்ப்பர்
நீரொருவர் கைகாட்டும் நபர்தான் எம் மேய்ப்பர் 14

அந்தநபர் வந்துவிட அருள்புரிய ஏனோ
முந்தவில்லை என்தேவன் முடிவென்று சொல்வான்?
அந்தநபர் வந்துவிட்டால் அப்போது சொல்வீர்
இந்தியாவின் நல்லாட்சி இறைவனுக்கு சாட்சி. 15

பகுதி 3

இந்தியாவின் சந்துபொந்தில் அவன்தடங்கள் உண்டு
கந்தகத்தின் அனற்காற்றை அவன் கடந்ததுண்டு
செந்தழலில் செய்தொழிலில் சிறந்திருப்பான் பாவம்
சிந்திக்கத் தெரிந்தவனாம் செயல்படவும் செய்வான் 1

வருங்கால மேய்ப்பனுக்கு வாய்த்திருக்கும் இந்த
அரிதான அடையாளம், இன்னுமுண்டு சொல்ல.
இருந்தாலும் இதுபோதும் எனக்கெதற்கு வம்பு?
வருந்தாதே கர்த்தரையே வழக்கம்போல் நம்பு 2

13-செப்டம்பர்-2010
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us