Home
கொல்லம்-விருதுநகர்-சென்னை வழித்தடம்:

சீனிராஜ் சிவகுமார்

தரிசு நிலமெங்கும் தண்ணீர் தடவாக்
கரிசல் வெளிக்காற்று காந்தும் - விருதுநகர்
மாவட்டச் சிற்றூரில் மன்னன்போல் வாழ்ந்ததில்லை
தீவளர்த்தேன் உள்ளே தினம்

கம்மங்கூழ் வத்தல் கருவாடு கண்டுவிட்டால்
அம்மம்மா அன்றெனக்கு ஆனந்தம் - அம்மாவோ
நூறுரூபா தாங்கக்கா நாலுநாளில் தந்துடுவேன்
ஆறுமுறை கேட்டுவிட்டாள் ஆம்

பக்கத்து வீட்டக்கா பேசாமப் போயிட்டா
ரொக்கத்தால் சொந்தங்கள் ரொம்பதூரம் - வெக்கமும்
மானமும் ஏழையை மல்லுக்குக் கூப்பிடும்
ஈனப் பிறவி எதற்கு?

ஊர்ப்பொங்கல் சாட்டினால்தான் உள்ளிறங்கும் வெண்சோறு
யார்கையில் காசிருக்கு யோசித்தேன் - கார்த்திகைக்கும்
கட்டவேண்டும் எல்லோரும் கோவில் வரிப்பணம்
பட்டினியில் கொண்டாட்டம் பார்

சென்னை நகர்சென்றால் சேர்த்து விடுவாரென்
அண்ணண்மார் கம்பெனியில் ஆள்பிடித்து - கன்னம்
தடவித் தழுதழுத்துத் தாயார் கலங்க
விடைதேடும் என்னிடம் வீடு.

தீப்பெட்டி ஒட்டி தினந்தோறும் தாளடுக்கிச்
சாப்பிட்டால் தானே செரிக்குமப்பா - ராப்பகலாய்
நீவிழித்துப் பாடம் நிறுத்திப் படிராசா
கூவுது கொல்லம் மெயில்.

2007
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us