Home
இங்கே மனிதர்கள் வசிக்கிறார்கள்

சீனிராஜ் சிவகுமார்


உனக்கான பாதையை
உலகின்கண் பார்க்காது.
தனக்கான பள்ளத்துள்
தள்ளிவிடத் தயங்காது.
மனக்கோட்டை கட்டாத
மனிதமனம் கிடையாது
மணல்மேட்டை அலைதகர்க்கும்
மலையென்றால் கரையாது 1

கனவுக்கும் நனவுக்கும்
காலமெல்லாம் போராட்டம்.
உணவருந்தி முடித்தவுடன்
ஊர்வாய்கள் உனையரைக்கும்.
மனிதர்வாழ் கிரகமிதை
மறக்காதே பிழைத்திருப்பாய்.
புனிதர்கள் போலிருப்பர்,
பூச்செடியும் பூச்சியுண்ணும். 2

(அசைவம் உண்ணும் செடிகொடிகள் உண்டு (insectivorous plants).
உதாரணம்: நெப்பந்திஸ் nepenthes இனத் தாவரங்கள்.)

பூச்சியாக இருக்காதே
புன்னகைக்குக் கிறங்காதே.
நீச்சல் புதைகுழிக்குள்
நீபோட இறங்காதே.
கூச்சல் குழப்பத்தில்
குயிலிசைதான் கேட்காதே.
ஆச்சர்யம் ஏதுமில்லை
அயர்ந்துவிட்டால் கீதமில்லை. 3

நாலுசொல் அளந்திருப்பாய்
நாவடக்கம் இல்லையென்பான்
நாலுபத்து வருஷங்கள்
நிறுத்தாமல் ஏசியவன்.
ஆலமர நிழல்கண்டால்
ஆயிரந்தான் ஓட்டையென்பான்
வேலமரத் தண்டின்மேல்
வேர்ப்பலாவைத் தேடியவன். 4

வாயிருக்கும் நாக்கிருக்கும்
வாய்வெளியே பொய்வழியும்
ஆயிரத்தைச் சுழியென்றான்
அமிழ்தத்தைச் சளியென்றான்
நாயென்ற பயல்களெல்லாம்
நாள்தோறும் குரைத்திருக்க
நோயாளி இவனென்றான்
நொடிப்பொழுதில் விறைத்தானே 5

உன்னைச் சரியாக
ஒருவன் புரிந்திருப்பான்
உன்னில் ஒளிந்திருப்பான்
உடன்வருவான் கடைசிவரை.
என்னையும் சேர்த்திங்கே
எவர்தாம் உனையறிவார்?
தன்னை உணர்ந்தவனே
தொலைந்தாலும் தோன்றிடுவான். 6

----------------------------------------------------------------
ஏப்ரல்-2008
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us