Home
பசுமைப் புரட்சி

சீனிராஜ் சிவகுமார்

மருத நிலமா பாலை நிலமா என்று புரியாத ஒரு பிரதேசத்தில் திருகு சொம்பு, தூக்கு வாளி தூக்கி வந்த உழத்தியிடம் உழவன் சொன்னது.

எண்சீர் விருத்தங்கள்

காலடியில் நிழல்பதுங்கும் உச்சி வேளை
    காற்றே தீ போலாகிக் கருக்கும் நாளில்
நீலகிரி மலைக்குளிராய் வந்து சேர்ந்தாய்
    குளிராக வந்தென்னைப் போர்த்திக் கொண்டாய்.
நாலுதிசை பார்த்துவிட்டுக் குறும்பு செய்தேன்
    நாணமுள்ள பெண்ணாகக் காட்டிக் கொண்டாய்
ஆலமரம் அதில் காகம் இருப்ப தையே
    அய்யய்யோ மறந்துவிட்டோம் போச்சே மானம்


கட்டைவிரல் வரிகள்போல் உழுது விட்டுக்
    களத்துமேட்டில் ஓய்வெடுக்கும் டக்கர் வண்டி1

கட்டழகே எனக்குமட்டும் ஓய்வில் லையா?
    களைச்சிருக்கேன் எங்கேம்மா தூக்கு வாளி?
விட்டுவிட்ட பாகங்கள் மண்ணில் கூட
    வெளிறிப்போய்க் காத்திருக்கும் கலப்பைக்காக.
திட்டமிட்ட பரப்பெல்லாம் உழுது விட்டுத்
    திரும்பிவந்த பின் தணிப்பேன் உனது தாகம்.


திருச்செந்தூர் ரோட்டிலுள்ள தொழிற்சா லையில்
    டீ.ஏ.பி2 உற்பத்தி தொடங்கி ருச்சாம்

உரக்கடையில் உன் தம்பி தகவல் சொன்னான்
    ஒத்தாசை செய்வதாக ஒத்துக் கிட்டான்.
அரைக்கிணறு நிறைஞ்சிருக்கே ஆச்சர்யந் தான்.
    அங்காள ஈஸ்வரியின் அருள் தான் எல்லாம்.
எரிஞ்சுபோன மோட்டாரில் காயில் மாத்தி
    ஏழுநாளில் கட்டவேணும் வாய்க்கால் பாத்தி.


பம்பு செட்டு மூணுநாளு வேணுமின்னு
    பங்காளி கேட்டிருக்கான், கொடுக்க லைன்னா
வம்பாகி வாய்க்காலில் தண்ணி யில்ல
    வாங்கிய கை துண்டாகி ரத்தம் பாயும்.
எம்பாகம் பெரிசுன்னு சொல்லிப் பாத்தும்
    எடுபட்ட பயலுக்குப் புரிய வில்ல
கொம்பு சீவி நிக்கிறாண்டி காதைப் பொத்தி.
    கிறுக்கனுக்குக் கழண்டுருச்சோ இருக்கும் புத்தி?


பருத்தியுடன் உளுந்தையும் போட வேணும்
    பக்கத்தூர் ஆட்களைத்தான் தேட வேணும்.
கரண்டுசப்ளை தினம் மதியம் வருமின் னாங்க.3

    கண்ணுலயே கரண்டெப்படி வச்சி ருக்கே?
சரிஞ்சிருக்கு முந்தானை எடுத்துப் போடு
    சரி சரி நான் என்ன சொன்னேன் எங்கே விட்டேன்?
மறுகரையில் கொத்தூரில்4 ராமசாமி

    மருந்தடிக்கக் கூப்பிட்டாத் தட்டமாட்டான்


பட்டணத்தில் விவசாயம் படிச்ச நம்ம
    பலசரக்குக் கடைக்காரர் மவந்தான் சொன்னான்
சொட்டுகூட இஸ்ரேலில் வீணாகாம
    சிந்தாமச் சிதறாமப் பாய்ச் சுறாக.
நட்டமென்ன நம்மசனம் கத்துக் கிட்டா?
    நம்மபுள்ள காலத்தில் நிலம மாறும்.
வெட்டவெளி ஆகாயம் கிணத்த நம்பி
    வெள்ளாமை காத்திருந்தா என்ன தேறும்?


ஓடோடி வந்து பாத்தா உச்சி வானில்
    ஊர் தாண்டிப் போகுதடி பாழாய்ப் போன
நாடோடி மேகங்கள் நம்ப வேண்டாம்.
    நீர்வேண்டி மழைக் கஞ்சி5 கேட்க வேண்டாம்.

ஆடாமல் அசையாமல் ரயில் ரோட்டோரம்
    ஆமணக்கு நிக்குதடி வானம் பார்த்து.
ஓடாத ஓடைக்குள் மணற்ப ரப்பில்
    ஒருவருஷம் ஆச்சுதடி ஈரம் பார்த்து.


வெல்லத்தை இப்படித்தா, கூழை ஊத்து
    வெஞ்சனம் உன் விரல்பட்டுத் தித்திப் பாச்சு
கல்விளைஞ்ச பூமியைநம் பாட்டன் பூட்டன்
    பொன்விளையத் திருத்தித்தான் வச்சிருக்கான்
எல்லாமே சரியாகப் போச்சு துன்னா
    ஏழெட்டுப் பவுனெடுத்துத் தாரேன் புள்ள
இல்லாமப் போனாலும் குத்தமில்ல
    இந்தியாவின் நிதிநிலம மோசமில்ல.


30-செப்டம்பர்-2007

அடிக்குறிப்புகள்:
1. நகர்ப்புற வாசகர்களுக்கு: டக்கர் வண்டி - ட்ராக்டர் வண்டி அல்லது உழவு வண்டி. இந்த இயந்திர மாட்டின் பின்னால் டில்லர் என்கிற கலப்பை பொருத்தப்பட்டிருக்கும்
2. Di ammonium phosphate fertilizer
3. நீர்ப்பாசனத்துக்கான மின்சாரம் ஷிஃப்ட் முறையில் விநியோகிக்கப் படுவதுண்டு. காலைக்கரண்டு, மாலைக்கரண்டு என்று சொல்வார்கள். சமயங்களில் டார்ச் லைட், மண்வெட்டி எடுத்துக் கொண்டு பூச்சிபொட்டுக்குப் பயப்படாமல் நள்ளிரவிலும் விவசாயிகள் செல்வதுண்டு. எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே இப்படித்தான்.
4. கொத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூர் முதல் கோவில்பட்டி வரையுள்ள தெலுங்கு பேசும் கிராமங்களில் புதிதாக உருவானகுடியிருப்புப் பகுதிகளை இப்படித்தான் அழைப்பார்கள்.
5. வீடு வீடாகச் சென்று மழை வேண்டிக் கஞ்சியை யாசகம் பெற்று அருந்துவதுண்டு. மனிதசாதியில் நடக்கிறதோ இல்லையோ, கழுதைகளுக்குக் கல்யாணம் செய்து வைப்பதும் உண்டு.
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us