Home
கடவுள் நம் பயிற்றுநர்

சீனிராஜ் சிவகுமார்


கடவுளைப் பற்றி நான் கொஞ்சமே அறிந்தவன்

கவிஞனின் முழுமையும் கடவுளே அறிந்தவர்.

தடைகளைத் தாண்டிநான் தாவினேன் வானிலே

தேவனே சிறகுகள் தருகிறார் இரவலாய். 1இரவலாய்த் தருபவர் இகழ்வதே இல்லையே,

வரவெலாம் கடவுளின் வலதுகை தருவதே.

சிரமமும் செலவுமென் சிறுமதிக் கிரியையே

சரிகம பாடுவேன் சப்தமென் அடிமையே 2அடிமையின் உலகிலே அடிமைதான் அரசனே,

அடிதடி செய்கிற அரசனும் அடிமையே.

பொடிப்பொடி ஆக்குவார் புலையரின் சூழ்ச்சியை,

மடையரின் முதுகது மிதியடி ஆகுமே. 3அமைதியே பக்தனின் அணுக்கதிர் ஆயுதம்,

இமைகளின் இடுக்கிலே இடர்களைச் சுமப்பதேன்?

சுமக்கிற வேளையில் சத்திய வேதமே

அமுங்கிய மகிழ்ச்சியை அகழ்ந்துதான் ஊற்றுமே. 4கொசுக்களின் நடுவிலும் கண்களில் உறக்கமே.

வசைமொழி நடுவிலும் வாழ்த்துவான் இறைவனே.

இசைமொழி பாடினேன், இறைவனின் இரக்கமே.

அசைக்கவா முயல்கிறாய்? அமிழ்பவன் அரக்கனே. 5இறைவனை எதிர்ப்பவன் இந்துவும் அல்லனே.

குறைகளைச் சேர்ப்பவன் கிறிஸ்தவன் அல்லனே.

முறைகளில் தவறியோன் முஸ்லிமா அறிகிலேன்.

இறைவனின் மதமெனில் எதற்கடா பெயர்களே? 6பிரார்த்தனை கேட்பவர் பாதையில் நடந்து போ.

அரைமணி தினசரி அருந்தவம் செய்துபார்.

சரிந்தவன் எழுந்திட சாமரம் வீசுவார்

கரந்தனை நீட்டுவார் காற்றுடன் பேசுவார் 7கடவுளின் புத்திரர் காண்பதை மற்றவர்

தடவியே உணர்வராம் தெளிவிலும் குழப்பமாம்.

படிப்படி யாகவே போகவே நேரினும்

கொடுப்பினை தருகிறார், கடவுளே வழித்துணை. 8போகிற வழியிலே பலகைகள் வைக்கிறார்.

ஆகிற காரியம் ஆகவே அவற்றிலே

ஆகமக் குறிப்புகள் எழுதினார் நண்பனே

மோகமாய்ப் படித்தறி, முயற்சியில் வெற்றியே. 9கடவுளின் மொழியிலே கலந்துரையாடினால்

விடைகளும் வழிகளும் விருப்பமாய்ச் சொல்லுவார்,

இடைவெளி கூடினால் இறைவனும் நிறுத்துவார்

கடைநிலை அடைகிறார் கர்த்தரை மறப்பவர் 10தூயவர் நெருங்கினால் தீயவை தூரமே.

நீயவர் கால்களில் நித்தமும் பணிந்துகொள்

சாயலில் தேவனாம் ஆயினும் பாவியாம்

பேயனைப் பிரித்தறி, பகவனைக் கண்டு கொள் 11தடுக்கிய கால்களில் தடவுவாய் வெண்பனி

அடுத்து நீ நிற்பது இமாலய மலைமுடி.

படித்தவன் யாரெனில் பள்ளியில் அல்லவாம்

படைத்தவன் காட்டிய பகுதியில் நுழைந்தவன். 12செயல்களில் தோல்விகள் செலவுகள் இவையெலாம்

உயர்ந்தவன் யோசனை உதறிய படியினால்.

அயலகப் பல்கலை அறிஞனோ சராசரி.

உயர்ந்தவன் என்பவன் ஒருவனே இறைவனே 13உனக்கென காரியம் ஒதுக்கியே வைப்பவர்

அனுப்பிய திசையிலே அசுரனும் பயந்தவன்

கனைக்கவோ முறைக்கவோ கயவனும் தயங்குவான்

அனுப்புநர் தேவனே பெறுபவர் தேவனே. 14நல்லவர் தொடர்புகள் நாயகர் தருகிறார்

இல்லையா தனிமையில் இருத்தியும் காக்கிறார்

புல்லர்கள் வாசனை பக்தனை நெருங்குமா?

மல்லிகை வாசனை மயக்குமா கிறக்குமா? 15இரண்டுகால் பாம்புகள் எதிரிலே வருகையில்

மிரண்டவர் கடவுளால் மீள்வரே, மூலையில்

சுருண்டவர் ஜெயிக்கவும் சூத்திரம் உள்ளது.

சரணடை அவரிடம், சொல்லுவார் நிச்சயம். 16அனைவரும் மாணவர், ஆண்டவன் வாத்தியார்.

முனைவரும் அவரிடம் முதல் கிளாஸ் குழந்தையே.

இனியவர் வகுப்பிலே இல்லையே பிரம்படி.

முனிவனே, அரைகுறை மனிதனே படி படி. 1717-செப்டம்பர்-2010

Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us