Home
விடுபடு திசைவேகம்

(Escape velocity)

சீனிராஜ் சிவகுமார்

ஓரத்தில் தீப்பிடித்த
ஒருபஞ்சுப் பொதிநகரும்.
தூரத்தில் மாயக்கை
தூரிகையால் வரைந்தழிக்கும்.
யாருக்கும் புரியாத
நவநவீன சித்திரங்கள்
ஊர்ந்துசென்று உருமாறும்
உச்சிவானே கலைடாஸ்கோப். 1

எங்கள்கண் பார்க்காத
ஏதோஓர் உயரத்தில்
எங்கெங்கே உன்வெளியில்
எம்சாதி வாழ்கிறதோ?
அங்கேயும் என்போன்ற
ஆகாய ரசிகர்கள்
பொங்கும்கண் தொலைநோக்கி
பேனாவால் அளப்பீரோ? 2

பிரபஞ்ச நகரத்தில்
பால்வீதி ஒருவீதி.
தெருவிளக்கு பலகோடி
தெரியாத தெருகோடி.
ஒருவிளக்கைச் சுற்றிவரும்
ஒன்பது வீடதிலேயோர்
சிறுபந்தே முகவரியாய்
சிலபேர்கள் கொண்டுள்ளோம். 3

பத்துகிலோ மீட்டரல்ல
பார்வைக்குள் இருந்தாலே
பத்து ஒளியாண்டு
புகைவிட்டுத் தள்ளிநிற்போம்.
எத்தனை வீதிகளோ
ஹைட்ரஜன் விளக்குகளோ?
எத்தனை வருஷத்தில்
எட்ட முடிந்திடுமோ? 4

இடங்களுக்கு இடைப்பட்ட
எத்தனை மைல்களையும்
தடைகள் இருந்தாலும்
தாண்டிவர வழியுண்டு.
கிடந்து தவிக்கின்ற
காதல் மனங்களெல்லாம்
தொடுகிற தொலைவிருந்தும்
தொடத்தான் முயற்சியில்லை. 5

மகராசன் என்போனை
முழுக்கிறுக்கன் ஆக்கிவிடும்
முகம்பார்த்துச் சிரித்துவைக்கும்
முதுகில்தான் குத்துவைக்கும்
சகஜாதி சேர்ந்துகொல்லும்
சரிசமமாய்ப் பகிர்ந்துகொள்ளும்
மிகஉயர்ந்த கிரகமிது
மேலேயும் அப்படியா? 6

ஆண்ட்ரோமிடா (Antromeda galaxy) வீதிக்கப்பாலும்
உயிர்க்கோளில்
மூன்றாம் மனிதர்கள்
மூட்டிவைக்கும் புகைச்சல்கள்
ஆண்டாண்டு காலமாய்
எரிந்திடுமோ குடும்பத்தில்?
வேண்டி வினவுகிறேன்
விளக்கங்கள் தருவாயா? 7

எண்ணெய் நீர் இரண்டுக்கும்
ஏழுபடை அணிவகுக்கும்
கன்னக்கோல் வைத்தவுடன்
காவலாளி ஆகிவிடும்
மின்னிவெடி வெடிப்பதுதான்
மண்ணுலகப் பொதுமொழியாம்
என்னமொழி உன்கோளில்?
அவ்விடமும் அப்படியா? 8

தேள்கொடுக்கில் விஷமிருக்கும்
தேன்போலப் பேச்சிருக்கும்
ஆள்கணக்கைக் குறைத்துவிட்டு
அமைதிக்காய்ப் பாடுபடும்.
நாள்கணக்குத் தாகமென்றால்
நாலுசொட்டு நீர்கிடைக்கும்
கோளறியாத் தொலைவிலுள்ள
குடிகளிலும் அப்படியா? 9

மூளைக்குள் பேய்புகுந்தால்
முறியடிக்கத் தெரியவில்லை
கோள்மூட்டி அலுப்பதற்குள்
கோளனுப்பி அலுத்துவிட்டோம்
நாளும் அலுவலகம்
நல்லதம்பி போகின்றான்.
வேளை தவறாமல்
வரவேண்டும் பேருந்து. 10

ஈர்ப்புவிசை பூஜ்யமாக
இன்பஉலாப் போய்வரலாம்,
வேர்பிடித்த உறவுகளை
விட்டுவிட முடிகிறதா?
வேர்பிடித்த உறவினின்றும்
விடுபடவே முடிந்துவிட்டால்
ஈர்ப்புவிசை இழக்காமல்
இன்பமிங்கு கிடைக்காதா? 11


தரவு கொச்சகக்கலிப்பாவைத்தான் மடக்கி எழுதியிருக்கிறேன்.
2007
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home | Contact Us