Home
எண்ணும் எழுத்தும்

சீனிராஜ் சிவகுமார்

1

அமினோ அமிலங்கள், ஆஹா புரதம்!
எமதர்மன் வந்தால்தான் என்ன? - சமையல்
அறைக்குள் சமாதி அமைக்கவே அஞ்சி
மரிப்பான், உணவே மருந்து. 1

உடலுக்கு மட்டுமா ஊட்டங்கள் தேவை?
மடமை பலர்க்கு மனநோய் - இடர்கள்
தகர்க்கவே தேவை தரமான ஞானம்,
புகட்டவே நூலகம் போ. 2

பாம்பு விஷமும் பருப்பும் புரதம்தான்,
பாம்பு விஷமா பருகுவாய்? - வேம்பாய்க்
கசந்தாலும் நல்லநூல் கண்டால் விடாதே
வசந்தத்தின் எல்லைக்குள் வா. 3

தூங்கவைக்கும் நூலிலொரு தூக்கம் கெடுத்தவரி
ஏங்கவைக்கும் காதல் இலக்கியம் - நாங்கள்
விழிகளென்னும் நூல்கள், விழிப்புணர்வு ஊட்டி
அழிவைத் தடுக்கும் ஆம். 4

2 (கலிவெண்பா)

என்னைப் புரட்டிவீசும் ஏடுண்டு, ஆனால் நான்

இன்னும் புரட்டிவீசும் ஏடுமுண்டு. பெண்ணவள்

முத்தவாடை வீசுகிற மோகநூல்கள் மட்டுமா?

ரத்தவாடை வீசும், ரகசியங்கள் பேசும்

சிலநிமிடத் தீமூட்டும் சிற்றின்பம் போல

பலப்பல ஈக்கள் பெருகியே மொய்த்திடும்

குற்றநூல்கள் ஆங்குண்டு, கூவிவிற்கும் வாழைத்தார்

முற்றிப்போய்ப் பக்கத்தில் மானமற்றுத் தொங்குவதைப்

பார்த்திருக்கிறேன் தேசத்தின் பெட்டிக் கடைகளிலே.

பார்த்துப்போ, போகாதே பாய்ந்து.

3

படிக்கப் படிக்க வளர்கின்றன
அறிவும் அறியாமையும்.

அன்றாடம் படிக்கிறேன்
(என்) அறியாமையை அளவெடுக்க.

எழுதிப் பழகிய பின்புதான்
இதனைத் தெரிந்து கொண்டேன் :

எழுத்தாளன் சராசரி

வாசகனே புத்திமான்.

ஆணவ அளவு கூடாதிருக்க
அவ்வப்போது எழுதுகிறேன்.

4

புத்தகத்தில் இல்லாத
படித்தவன் எங்கும் சொல்லாத

அரிய ஞானத்தில்
அரை விழுக்காட்டளவுக்கும்
ஆயிரம் பல்லாயிரம் மடங்கு குறைவாக

அறிந்து கொண்டதெல்லாமே

மழைக்கும் கூட
வகுப்பறைப் பக்கம்
மறந்து போயும் ஒதுங்காத

பேரறிஞர்கள் சிலரிடமே.

பேசிப் பார்த்தால் பார்வை வரும்.

எண்ணும் எழுத்தும் மட்டுமா கண்கள்?

5

அக்பர் காதுகளால் படித்தானாம்

கண்களாலும் காதுகளாலும் கைகளாலும்
சில சமயம் கால்களாலும்
படிப்பதுண்டு
தொழிற்சாலைப் பணி பயில்வோர்.

அன்பனே

அறிவுக்கு எது வேண்டுமானாலும்
நுழைவாயிலாய் இருக்கலாம்.

ஐம்புலன்களாலும் அறிவு பெறு.

6

விவாதம் செய்பவன் அறிவாளி.

தீர்வு சொல்பவன் ஞானி.

அறிவு கலகம் செய்கிறது.

ஞானம் அமைதி ஏற்படுத்துகிறது

அறிவு பிரித்து வைக்கிறது.

ஞானம் சேர்த்து வைக்கிறது.

அறிவாளி தன்னை மட்டும் அறிவாளி என்று நினைத்துக் கொள்கிறான்.

ஞானி தன்னைக் கூட ஞானி என்று ஒத்துக் கொள்வதில்லை.

ஞானியாய் இருக்க பயமாயிருப்பதால்
அறிவாளிகளாய் இருக்கிறோம்.

6

பூமியைச் சூரியன் சுற்றுவதாய்ச் சொன்னதொரு காலம்.
நாம் அறிவென நினைப்பது வெறும் யூகமாயிருக்கிறது.

சூரியனை பூமி சுற்றுதல் கண்டது மறுகாலம்.
அறிவு சில நூற்றாண்டுகளுக்குள் சிலபோது மாறிவிடுகிறது.

அறிவு பலூன் மாதிரி.
ரொம்பவும் ஊதாதே.
வாய்தான் மனிதகுலத்தின்
பிரச்சினைகளுக்குக் காரணமாயிருக்கிறது.

ஞானம் பலூனுக்குள்ளும் வெட்டவெளியிலும்
மூச்சுக் காற்றாய் இருக்கிறது.

நம் வாய் வெளியிடும் வார்த்தைகளாலும்
சல்பர் டை ஆக்ஸைடாலும்
மூச்சுக் காற்றை மாசுபடுத்தாதிருப்போம்.

7

அறிவு
இருபது வருடப் படிப்பும் அறுபது வருடப் படிப்பினையும்
சம்பாதித்துத் தருவது.

நூறு சதவீதம்
ஞானியாகவே பிறந்தவன் அதிர்ஷ்டசாலி.

8

இந்தப் படைப்பு படிப்பால் அல்ல
படிப்பினையால் எழுதப் பட்டது.

ஆனாலும் என் வயது எண்பதல்ல.


22-செப்டம்பர்-2010
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us