Home
தேர்தலோ தேர்தல்

சீனிராஜ் சிவகுமார்


(இது கி.பி. 1990 களில் நான் எழுதி வைத்திருந்த வசன கவிதை. இன்றைக்கும் பொருத்தமாயிருக்கிறது - சிவகுமார்)

மீண்டும் தேர்தல் வருகிறது.

தீயவர்களின் திருநாள் வருகிறது.

ஏமாற இவர்களும் ஏமாற்ற அவர்களும் தயாராகிக்
கொண்டிருக்கிறார்கள்.

கடவுளைத் தேர்ந்தெடுக்க இவர்களுக்கு ஆசைதான்.
தேர்தலில் நிற்பவர்கள் சாத்தான்கள் மட்டுமே.

அவர்களுக்குக் கொள்ளையடிப்பது தொழில.

அவர்களில் சிலருக்குக் காலில் விழுவது உப தொழில்.

கால் கண்டார் காலே கண்டார்

இந்தியா - இது நடுக்கடலில் பயணம் போகும் ஓட்டை விழுந்த கப்பல்.

ஓட்டை விற்று ஓட்டை அடைக்க முயலாதீர்.

வாக்குறுதிகள் புல்கட்டுகள்
வாக்காளர்கள் பலியாடுகள்.

மத்திய மாநில சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் - பூக்கடைக்குள் சாக்கடை.

மழைக் காலத்துக் காளான்கள் - தேர்தல் நேரத்துப் புதிய பழைய அநீதிக் கட்சிகள்.

இவை தடாகங்களல்ல, புதைகுழிகள்.

கானமே நமது நேயர் விருப்பம்.
எல்லா அலைவரிசைகளிலும் கத்துகின்றன காட்டெருமைகள்.

அணுகுண்டு அவர்களை விட ஆபத்தானதில்லை.

வேடந்தாங்கல் வேடர்களின் கையில் இருக்கிறது.
வேடந்தாங்கல் அவர்களுக்கு முகம் வந்த கலை.

காற்றில் படபடத்தபடி காணாமல் போன சுதந்திரத்தைத் தேடுகிறது தேசக் கொடி.

தொலைக்காட்சியின் முக்கல் முனகல்களில் மூர்ச்சையாகிக்
கிடப்பவர்களே, தேசிய கீதம் முகாரி ராகத்தில் முனகுவது
கேட்கிறதா?

இளைய பாரதமே, திரையரங்க இருட்டுக்குள் தொலைந்து போகாதீர்கள்
வெளிச்சம் வெளியேயும் உள்ளேயும் இருக்கிறது.

தாங்கவேண்டிய தூண்களே
மதுபானக் கடைகளில் தள்ளாடாதீர்கள்.

உங்களில் ஒருவர்.. உங்களில் ஒருவர் தலைவனாகுங்கள்..

இந்தியா காத்திருக்கிறது ஏக்கத்துடன்.

Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us