Home
தீர்க்க தரிசனம் - 1

சீனிராஜ் சிவகுமார்

கட்டளைக் கலித்துறை

தீர்க்க தரிசியே மக்கள் தலைவன் படைபலமும்
மூர்க்க மனிதரை ஆலோ சகராய் உடையவனும்
யார்க்குத் தலைவனோ யானறி யேனே நகல்தலைவன்
ஊர்வலம் வந்தால் உலகம் பயந்து தொழுகிறதே 1

அதிகா ரிகளின் அழகு முகமாய் இருப்பவனை
இதயம் வெறுக்கும் இருப்பினும் நாக்கு புகழ்ந்துரைக்கும்
உதய வெளிச்சமாய் வந்த ஒருநிஜம் தூங்கியதும்
மதியம் உறங்கிய மக்கள் அனைவரும் தேடினரே 2

கல்விப் பெருக்கையும் செல்வச் செருக்கையும் மண்ணசைக்க
தில்லியும் நேபாளம் போலாடக் கண்டான் திகைப்பெதற்கு
கல்வெட்டில் காவலன் தன்பெயர் போட்டாலும் காலமதை
நெல்வேலி ஆற்றின் மணற்துகள் போல நொறுக்கியதே 3

கலைமகள் பிள்ளை ஒருவனின் கண்ணீர் பெருகியதால்
மலைகளும் ஆடின மன்னரும் ஆடினர் மீட்சியில்லை
தலைநகர் வேறிடம் மாறினால் தப்பித்தான் தூயமகன்
தலைநகர் வேறிடம் மாறியும் சாவது கீழ்மகனே 4


3 date: 11-May-2015
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us