Home
சினம் - சில குறிப்புகள்:

சீனிராஜ் சிவகுமார்


1

இரயிலிலிருந்து காந்திஜி
இறக்கிவிடப் படும் முன்னர்
அவமானம் அடையவில்லையோ
ஆப்பிரிக்காவில் இந்தியர்கள்?

சினமேறும் தலைவர்கள்
சிம்மாசனத்தில் அமர்ந்துவிட்டால்
அமைதிகாப்பவன் மேனி தினம்
அந்த மூடரின் வாயிற்படி.

சிம்மாசனத்தை அடையாமல்
செருக்கில்லாச் சினம்கொள்வோர்
சேவைசெய்து ஆள்வார்கள்.
காந்தி பெரியார் அரசர்கள்.

2

சொல்லுங்கள்
பொறுமைக்கு உதாரணமா
பூமாதேவி?

உங்கள் வீட்டு
அழுத்தக் கலனில் (pressure cooker) உள்ளதைப் போல..

பூமியின்
பாதுகாப்பு வால்வு தானே
எரிமலை?

பூமிக்கோபத்தின்
மற்றொரு வெளிப்பாடுதானே
பூகம்பம்?

எரிமலை குமுறத் தொடங்கினால்
எட்டி நிற்கலாம்.

நினைக்காத நொடியில்
நிலம் நடுங்கினால்
என்ன செய்வது?

எரிமலையால் நன்மைகள் உண்டு.
பூகம்பத்தால்
அரண்மனைச் செங்கற்களும்
வரிசை தப்பிப் போகும்.

ஆகவே நண்பனே
கோபம் இருவகைப்படும்

காந்தியின் கோபம் ஒருவகை.
இது ஆக்கும் கோபம்.

ஹிட்லரின் கோபம் மறுவகை.
இது அழிக்கும் கோபம்.

3

அகிம்சையும், ஒத்துழையாமை இயக்கமும்
பொறுமையல்ல.
அவை கோபத்தின் மாறுவேஷங்கள்.

புத்திசாலியின் கோபம்
துப்பாக்கி தூக்காது.

4

நம் தவறுகளுக்கு
உடனே கோபப்படுகிறவனிடம்
எச்சரிக்கையாயிருப்போம்.

உடனே
கோபப்படாதவனிடம்
மிக மிக எச்சரிக்கையாயிருப்போம்.

அமைதியும் அமைதிகாப்பதும்
நிஜவாழ்க்கையில் இரட்டை வேடங்கள்.

கடலுக்கடியில் எரிமலை குமுறினால்
காத்திருந்து பார்
சுனாமி வரலாம்.

நாம் தவறுகளே செய்யாதிருக்க
ஆண்டவனின் அருள் கேட்போம்.

அடுத்தவன் தவறு செய்தானா?
மன்னிப்பே சிறந்த தண்டனை.

நீ தவறு செய்தாயா
அதைத் தெரியாமல் செய்தாயா?
மனசார மன்னிப்புக் கேள்

தவறுகளே கொடிய ஆசான்கள்.

5

மென்மையாய்ப் பேசினாலும் சரி
வன்மையாய்ப் பேசினாலும் சரி
அதில் நிரப்பவேண்டாம்
ஏளனச் சொற்கள்.

தங்கக்கோப்பையோ..
தாமிரக்கோப்பையோ
பழரசத்தில் விஷம் கலந்தால்
உறிஞ்சுவோமா?

6

மனிதர்கள் நான்கு வகைப் படுவர்

மென்மையாய்ப் பேசும் நல்லவன்.
இவர்களைக் காண்பதரிது.

மென்மையாய்ப் பேசும் அயோக்கியன.;
பூச்சியைத் தின்னும்
பொய்மலர் இவன்,
நெபெந்திஸ் (nephenthes) மாதிரி

வன்மையாய்ப் பேசும் நல்லவன்.
இவர்களைப் பரவலாய்க் காணலாம்

வன்மையாய்ப் பேசும் அயோக்கியன்
கந்துவட்டிக் காரன் மாதிரி.

எதிரில் நிற்பவனும்
எதிர்த்து நிற்பவனும்
எதிரிகளலல்லர்
குணமறிந்து சினம்கொள்.

7

பூமிக்கும்
சமையல் பாத்திரத்துக்கும்
மனிதனுக்கும் தேவை
பாதுகாப்பு வால்வுகள்.

மனதின்
அழுத்தம் அதிகரித்தால்..
சிலர் ஆயுதம் எடுக்கிறார்கள்.

ஜாம்ஷெட்ஜி
நட்சத்திர விடுதி திறந்தார்.

நான்
காகிதமும் பேனாவும் தேடுகிறேன்.

உன் பாதுகாப்பு வால்வு என்ன?


18-அக்டோபர்-2010
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us