Home
அச்சத் தீவு

சீனிராஜ் சிவகுமார்


அவர் தலையில் முகம் பார்க்கும் வசதி உண்(டு)
அதைச் சொன்னால் சிரிக்கின்ற விழிகள் ரெண்டு
சுவர் துளைத்துப் பார்க்கின்ற விழிகள் உண்டு
ஜெயகாந்தன் மீசைமேல் குகைகள் ரெண்டு.
பவுர்ணமிக்கும் பொங்காத கடலில் தானே
புத்தரிசி பொங்க தினம் மீன்கள் உண்டாம்
எவரெவரோ வலைவிரித்த இவ்விடத்தில்
இவருக்கும் படியளந்தான் இறைவனென்போன் 1

நிலத்தின் மேல் வழியறியா மனிதருண்டு
நீருக்குள் குண்டுகுழி தவிர்த்திருப்பார்
தலைவரைக்கும் கடல் மட்டம் உயர்ந்தாலென்ன?
தடுமாற்றம் அறியாத வயசுப்பையன்
வலைபரப்பிக் கரைசேர்ந்து காத்திருப்பார்
வாழ்க்கையில் சுனாமிகளைக் கடந்த வீரன்
சிலைவைக்கப் பெரிசுக்கு யாருமில்லை
சிலவரிகள் அதனாலே பாடி வைத்தேன் 2

இந்த வயதிலும் ஏன் வேலை செய்கிறீர் பெரியவரே?:

எண்பதைத் தொடுவதற்கு ஏழு மாதம் இருக்கிறது
உண்பதைத் தவிர்ப்பதற்கு ஒரு வழியும் இல்லையே
உண்பதைத் தவிர்ப்பதற்கு ஒருவழிதான் தெரிந்துவிட்டால்
உண்மையில் மறந்திருப்பேன் உப்புநீர்ப் பரப்பைநான் 3

மனைவி பற்றி?:

வாலிபத்தில் இடிச்சவளை வயசான காரணத்தால்
நாலுதினம் பட்டினியா நான் போட முடியும்?
வேலவெட்டி இல்லாமல் வெறுங்காத்து வாங்கிவர
காலாட்டிக் கைநீட்டும் கவர்மெண்டு ஆளாநான்? 4

மகனைப் பற்றி?:

அடிச்சு வளர்த்ததில்ல அவனும் வளந்ததில்ல
படிச்சு வளந்ததுமே பகைய வளர்த்துப்புட்டான்
கிடைச்ச பதவியிலே கிடைக்கும் பலவிதமா
எடஞ்சல் தகப்பன்னு எட்டி உதைக்கிறானே 5

மருமகளைப் பற்றி:

நாட்டுப்பெண் நல்லவதான் நாலெழுத்துப் படிச்சவதான்
கேட்டாளே ஒரு கேள்வி கேட்டுதாண்டி வந்துட்டோம்
ஓட்டை இருந்தாலும் வயித்த வல நிரப்பும்
வீட்டை இழந்தாலும் வளைதோண்டும் நண்டும்நான் 6

ராமேஸ்வரம் மீனவர் பற்றி இந்தத் தூத்துக்குடி மீனவர் சொன்னது:

எந்திரப் படகு கொள்ள என்னிடம் வசதியில்லை
கந்தையாய்ப் போனாலென்ன கைகளில் அசதியில்லை
தந்திரம் தெரிந்திருந்தால் திரேஸ்புரம் எனக்குச் சொந்தம்
இந்தியா என்பதெல்லாம் எனக்கிரு கடல்மைல்தானே 7

முத்துமா நகர்ப்புறத்து மீனவன் பரவாயில்லை
பத்துமைல் தாண்டும் முன்னே பாசமாய்ச் சுடுகிறானாம்
கத்தினால் கச்சத் தீவைக் கடந்துமைக் குரல் சேராது
செத்தமீன் வள்ளத்துள்ளே செத்தவன் வலைப்புறத்தே 8

ராணுவம் வந்துசேர்ந்தால் ராமனும் வாரான் அங்கே
ஈணவள் பெயரைச் சொல்வோம் ஈஸ்வரன் வாரான் அங்கே
மீனவன் பயணத்துக்கோ மீக்கடல் எல்லை உண்டே
ஆணவத்தோட்டாவுக்கோ அதிசயம் எல்லையில்லை 9

மொழிகளில் எங்கள் வாழக்கை முழுவதும் அடங்காதய்யா
வழிவழி நாங்கள் பட்ட வேதனை அஞ்சா பத்தா?
அழுகுரல் கேட்கும் போ(து) அனைவரும் தாயாகுங்கள்
எழுதிநீர் கிழிப்பதெல்லாம் அதுவரை வீணே வீணே.. 10

12-ஆகஸ்ட்-2008
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home Contact Us