Home
தொண்ணூறு நாட்கள்

சீனிராஜ் சிவகுமார்

காதல் மொட்டுவிட்ட நாளில் - நான்
கிணற்று நீரெடுக்கப் போனேன்
மாதம் முப்பதுநாள் ஏ.சி. - அறையில்
மாத இதழ்படிக்கும் பெண்நான். 1

கிணறு வற்றிவிட்ட கோடை - அக்
கிறுக்கன் தாலிகட்டி என்னை
மனைவி எனக்கொண்ட போது - ரதி
மதன லீலைகள் தொடக்கம். 2

வினாடி நேரத்தில் முடியும் - காதல்
வருஷக் கணக்கிலும் தொடரும்
மனசில் நடக்கின்ற போரே - உடல்
மதகை உடைப்பெடுக்கச் செய்யும் 3

மதியம் இரவேதும் இல்லை - என்
மெலனின் குறைந்த தோல் கண்டு
மதியை விட்டவனின் நாளில். - பாவம்
மயங்கிக் கிடக்கிறான் மடியில். 4

மெனோபாஸ் காலங்கள் தாண்டி - இவன்
மயக்கம் தொடருமா? அறியேன்.
தினமும் எமக்குள்ளே சண்டை - ஒரு
தழுவல் சமாதான மாகும் 5

மூன்று பௌர்ணமிகள் தேய மதி
முற்றிக் கிடந்தவன் தெளிந்தான்.
மூன்று முறைதவறி விட்டான் - எனை
மாலை காத்திருக்கச் செய்தான் 6

சொன்ன நேரத்தில் வீடு - கதிர்
சாயும் காலம் வந்ததில்லை.
சென்னை நகரத்தில் வசித்தும் - நான்
சினிமா மெரீனாவை அறியேன். 7

சொன்ன பேச்செதுவும் காதில் - இவன்
சேர்த்துக் கொள்வதே இல்லை.
கன்னம் உரசமட்டும் தயக்கம் - என்றும்
காட்டத் தெரிந்ததே இல்லை. 8

கொஞ்சல் மறக்கின்ற நாளில் - கடுங்
கோபம் அவன்முகத்தில் தெரியும்
அஞ்சி நடுக்கத்தை விழியில் - காட்டி
அசைய முந்தானை சரியும். 9

கட்டில் விளையாட்டில் கூட - என்
கருத்தைக் கேட்டதே இல்லை.
பட்ட மரமாகிக் கிடப்பேன் - புலன்
பூக்க மறுப்பதை அறியான். 10

சட்டைப் பைக்குள்கை விட்டால் - நீர்
சுட்ட எண்ணெய்யில் விழுந்துப்
பட்டுப் படாரென்று தெறித்தாற் - போல்
பல்லைக் கடித்து சொல் பொழிவான். 11

பெண்ணின் மனசையறியாமல் - அவன்
பெரிய மேதையே இல்லை.
விண்ணை அளந்தாலும் வீணே - நீண்டு
விரிந்த கடலளந்தும் குளமே. 12

ஜாடைப் பேச்சுக்கள் அறிவான் - ஒரு
ஜடம்போல் என்ராஸ்கல் இருப்பான்.
நாடி நரம்பெல்லாம் துடிக்கும் - அந்த
நடிகர் திலகத்தை ஜெயிப்பான். 13

கிண்டல் மொழிகேட்டும் கேளாச்- செவி
கேட்கும் பழங்காலப் பாடல்.
வண்டிச் சுமையளவு வைவேன் - வாய்
வலித்து மரத்ததே மிச்சம் 14

திட்டித் தீர்க்கின்ற வாயில் - அவன்
தேனும் சர்க்கரையும் வைப்பான்.
திட்டம் போட்டுத்தான் கள்ளன் - மதி
திருத்த மறுக்கிறான் போல. 15

தவறு நான்செய்த போதும் - இறங்கும்
தயாளம் அவனிடத்தில் இல்லை
கவலைப் பட்டென்ன லாபம் - சொல்
குடும்ப நலமன்றம் எங்கே? 16

15-11-2007
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home | Contact Us |