முகப்பு
மேரி க்யூரி

சீனிராஜ் சிவகுமார்

1

மேரி க்யூரியின் சாதனைகளுக்கு அங்கீகாரமாக இரண்டு முறை நோபல் பரிசும், தண்டனையாக இரத்தப்புற்று நோயும் கிடைத்தன.

ஆனால் அந்த நோயால் அவர் புகழைக் கல்லறைத் தோட்டத்துக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை.

2

பெரும்பாலானோர் கஷ்டப்பட்டு முன்னேறுகிறார்கள்.

மேரி க்யூரியின் வாழ்க்கை வித்தியாசமானது.

இவர் முன்னுக்கு வருவதற்கு முன்னும் கஷ்டப்பட்டார்.
முன்னுக்கு வருகையிலும் கஷ்டப்பட்டார்.
முன்னுக்கு வந்தபின்னும் கஷ்டப்பட்டார்.

3

போலந்தும் பிரான்சும் போட்டி போட்டு இந்தப் பெண்மணிக்கு அஞ்சல் தலை வெளியிட்டதும் பணத்தாளில் முகம் அச்சிட்டதும் படித்த இடத்திலேயே முதல் பேராசிரியை பதவியும் இவர் பெயரில் ஆய்வகம் தொடங்கப்பட்டதும் நிலைத்த புகழுக்கான நிமிடநேர ஒத்திகைகள்.

விசையின் அலகை நியூட்டன் என்கிறோம்.

அழுத்தத்தின் அலகுகளில் ஒன்றைப் பாஸ்கல் என்கிறோம்.

அதுபோல் கதிரியக்கத்தை அளக்க உதவும் அலகை க்யூரியென்று என்று அறிவியல் உலகம் வரையறை செய்ததே.. அதுதானய்யா பெரிய கௌரவம்.

அது மட்டுமா? யுரேனியத்துக்குப் பிந்தைய தனிமங்களில் ஒன்றுக்கு க்யூரியம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

4

எழுத்தாளர் மகன் எழுத்தாளராகவும் நடிகர் மகன் நடிகனாகவும் இசையமைப்பாளர் மகன் இசையமைப்பாளராகவும் வெற்றிக்கொடி நாட்டியிருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

அறிவியலிலும் அப்படிச்சில குடும்பங்கள் உண்டு.

மேரி க்யூரியின் கணவர் பியரி க்யூரியும் நோபல் பரிசு பெற்றவர்.

இத்தம்பதியின் மகள் ஐரீன் ஜுலியட் க்யூரியும் நோபல் பரிசு பெற்றவர்.

5

ஐரோப்பாவிலும்; சமையலறை மட்டுமே பெண்களின் ஆய்வகமாக இருந்த காலம் அது.

இவருடைய சகோதரிக்கு மருத்துவக்கல்வி கிடைத்தது.

மேரி க்யூரியோ மருத்துவக்கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டதால் தான் அடிப்படை அறிவியல் கல்வியைத் தேர்ந்தெடுத்தார்.

ரேடியோதெரபி அல்லது கதிர்சிகிச்சை என்ற வார்த்தையை இன்று நீங்கள் மருத்துவத்துறையில் கேள்விப்படுகிறீர்கள் என்றால் அதில் இவர் பங்கும் இருக்கிறது.

6

ரேடியம் கதிர்வீச்சு அமிர்தமில்லை. ஆனால் அளவுமீறினால் அது நஞ்சுதான்.

ரேடியம் புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது. அதைக் கண்டுபிடித்த மேரி க்யூரி புற்றுநோயால் இறந்தார்.

7

மேனிலைப்பள்ளியில் தங்கப்பதக்கம் பெற்ற மேரி க்யூரி படிப்புக்குச் சில ஆண்டுகள் இடைவேளை விட்டு ஒரு வீட்டில் ஆயா வேலை செய்தார்.

அக்காவைப் படிக்க வைத்தார்.
அக்கா மருத்துவரானார்.
தங்கையைப் படிக்கவைத்தார்.

8

அறிஞர்கள் உலகத்திலும் ஆன்ட்ரஜன், ஈஸ்ட்ரஜன் போராட்டங்கள் இல்லாமல் போவதில்லை.

வேலைக்காரியாக இருந்தபோது எஜமான் மகன் மேல் காதல்வயப்பட்டார் மான்யா என்ற மேரி.

கதிரியக்கத் தனிமங்கள் தன் கதிரியக்கத் தன்மையைத் துறந்தும் சிதைந்தும் நிலைத்த தனிமமாக மாறும் முயற்சியில் பாதி கதிரியக்கத்தை இழக்க ஆகும் காலத்தை அணு விஞ்ஞானத்தில் அரை-ஆயுள் காலம் என்போம்.

ரேடியம் ஐசோடோப் - 226 இன் அரை-ஆயுள் காலம் 1620 ஆண்டுகள்.

மேரி என்ற மான்யாவின் முதல் காதலின் முழு ஆயுள் காலம் சில மாதங்கள்.

9

கணக்குப் பதிவியலில் tangible assets, intangible assets என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

உங்கள் தங்க நகை, கார், காணிநிலம், பத்துப் பதினைந்து தென்னை மரங்கள் எல்லாமே தொட முடிந்த சொத்துக்கள் (tangible).

அறிவு தொட்டு உணரமுடியாத சொத்து (intangible).

சரியான முறையில் பயன்படுத்தினால் தொட்டு உணரமுடியாத சொத்தே தொட்டு உணரமுடிந்த சொத்தை ஈட்டித்தரும்.

ஆனால் மேரியின் அப்பாவோ ஆசிரியராக இருந்தும் பொருளீட்டும் ஆசையில் இருப்பதை இழந்தவர்.

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி.
ஆனால் ஐந்தாவதாக மேரியென்னும் ஐஸ்வர்யத்தைப் பெற்றுக்கொண்டவர்.

மேரி க்யூரி, பியரி க்யூரி தம்பதியோ ரேடியத்தைப் பிரித்தெடுக்கும் முறைக்குக் காப்புரிமையே பெற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை பெற்றிருந்தால் ஆல்ஃப்ரட் நோபல் மாதிரியே இவர்களும் கோடீஸ்வரர்கள் ஆகியிருக்க முடியும்.

மேரியின் குடும்பத்தில் அறிவுதான் செல்வம்.

10.

க்யூரி தம்பதியினரின் ரேடியம் போலோனியம் கண்டுபிடிப்பு ஆய்வுகளை மழையும் வெயிலும் வேடிக்கை பார்த்தனவாம். அவர்களின் ஆய்வகக் கூரைக்கு சல்லடையே பரவாயில்லையாம்.

ஆய்வு நிதியை அமெரிக்காவில் திரட்டினாராம் அம்மணி. நோபல் பரிசுத்தொகையில் ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு மிச்சத்தை ஆய்வுக்காகவே செலவிட்டாராம். முதல் உலகப்போரின் போது பதக்கங்களையும் தானம் தந்தாராம்.

உலகப்புகழின் உச்சியில் இருந்து இறங்கிவந்து அப்போரில் காயம் பட்ட வீரர்களின் எக்ஸ்-ரே தொழில்நுட்பாளராய்ப் பணி செய்தவர் இவர்.

இந்தியாவில் இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பட்டம் வைத்திருக்கிறோம் : பிழைக்கத் தெரியாத பெண்.

11

மோதிரக்கைகள் எல்லாம் குட்டிவிட முடியாது. மோதிரம் அணிந்தவரின் மூளையும் அதற்குத் தகுதியானதாய் இருக்கவேண்டும்.

(யுரேனியக்) கதிர்வீச்சைக் கண்டுபிடித்த அறிஞர் ஹென்றி பெக்கெரல் தான் மேரி க்யூரியின் முனைவர் ஆய்வுப்படிப்பில் குரு.

க்யூரி தம்பதியினர் இவருடன் தான் நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டார்கள்.

12

இரண்டாம் முறை மேரி க்யூரிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போதுதான் மூன்றாந்தர விமர்சனங்கள் கிளம்பின.

பேனாக்களில் மஞ்சள் மை அவசரம் அவசரமாக நிரப்பப்பட்டது.

சாலை விபத்தில் கணவனைப் பறிகொடுத்ததால் நோபல் குழு விட்ட அனுதாபக் கண்ணீர் என்றார்கள்.

கடலடி ஆய்வுக்குப் பயன்படும் சோனார் ஒலிமுறையைக் கண்டுபிடித்தவரும் பியரி க்யூரியின் சீடருமான பால் லாங்வின்னுடன் இணைத்துப் பேசினார்கள்.

அது எளிது.

வேதியியலில் புதிதாய்க் கண்டுபிடிப்பது தான் கஷ்டம்.

விவரமான சோதனை முறைகள் இருந்த போதே எப்போதோ யாரோ கண்டுபிடித்துவிட்ட உப்புக்களின் கார மூலத்தையும் அமில மூலத்தையும் மறுபடியும் கண்டுபிடிப்பதற்குள் விழிபிதுங்கி நின்ற கல்லூரி அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்.

13

மேரி க்யூரியைப் பற்றி நிறைய்ய்ய்ய எழுதலாம். கடைசி வரை விசுவாசமாய் வந்த ஏழ்மை, மன அழுத்தம், இளமையிலும் இடையிலும் பார்த்த மரணங்கள், கேட்ட சுடுசொற்கள், காலன் தந்த கடைசி நேர அவஸ்தைகள்..

இத்தனைக்கும் நடுவில் இவருடைய ஆராய்ச்சி சஹாராவில் நைல் நதி.

மனவலிமை = மேரி க்யூரி.

14

மேரி க்யூரி
தோற்றம்: 1867
மறைவு: 1934 என்று சொல்கிறார்கள்.

நான் நம்பவில்லை.
ஜனவரி, 2008
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.shivamaha.com , All rights reserved.
Home | Contact Us |