முகப்பு
ஆயுள் ரேகை

சீனிராஜ் சிவகுமார்

1

மல்லிப்புதூரில் பிள்ளையாருக்கும் கிருஷ்ணனுக்கும் நன்கொடை உபயத்தில் தனித் தனியே காரை வீடுகள் இருக்கின்றன.
முத்தாலம்மனும் மாரியம்மனும் ஆஞ்சநேயரும் பக்கவாட்டில் சிவப்பு வெள்ளைப் பட்டைகள் தீட்டப்பட்ட மேடைகளில் வீற்றிருந்தால் போதும் என்று பக்தர்கள் தீர்மானித்து விட்டார்கள்.
இந்தச் சிறு, குறு, பெருந்தெய்வங்களுக்கு அருகிலேயே மஞ்சள் நிறக் கட்டிடமொன்றை நீர் தோன்றி புரோட்டோசோவா தோன்றாக் காலத்திலேயே எழுப்பிவிட்டது மாநில அரசு. அதற்கு ஆரம்ப சுகாதார நிலையம் என்று பெயரும் வைத்திருக்கிறது.

2

எம்.பி, எம்.எல்.ஏக்களைக் குறை சொல்லாதீர்கள். அவர்கள் தொகுதிப்பக்கம் அடிக்கடி எட்டிப் பார்க்கிறார்கள். எம்.பி.பி.எஸ் படித்த தேவ தூதர்களுக்காகத் தான் இன்னும் காத்திருக்கின்றன இந்தியாவின் ஐந்தே முக்கால் லட்சம் மல்லிப்புதூர்கள்.

3

மல்லிப்புதூர் விவசாயிகள் வைத்திருக்கும் என்டோசல்ஃபானில் நூறு மில்லியை யாரேனும் அருந்திவிட்டாலோ ஓடைக்காட்டில் பிரண்டைச் செடி மறைவில் காலைக் கடன் முடிக்கையில் பாம்பு தீண்டிவிட்டாலோ அவருக்கு உடனடி மருத்துவ உதவி ஸ்ரீவில்லிபுத்தூரில் தான் கிடைக்கும்.
எங்கள் ஊரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றன ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனைகள். சுடுகாடு அவ்வளவு தூரமில்லை. அரை கிலோமீட்டரோ என்னவோ தான்.

4

எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்குத் தெரிந்திருக்கும். தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தீப்பிடித்து விட்டதாக அல்லது நச்சு வேதிப்பொருள் கசிந்து விட்டதாகக் கிளப்பி விட்டு சோதனை செய்வார்கள் பாதுகாப்புத் துறை ஆட்கள்.

ஏதேனும் வினைபுரிகலனின் கீழே ஊழியர்களில் சிலரை மயங்கிக் கிடப்பது போல் நடிக்கச் சொல்வார்கள். இதன் நோக்கம் நெருக்கடி நிலைகளில் ஆலையின் தீயணைப்பு வீரர்கள், மருத்துவமனை ஊழியர்கள், தொழிலாளர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள்? நிஜமாகவே அவசர காலம் ஏற்பட்டால் சமாளிக்கும் அளவுக்குப் போதிய பயிற்சி பெற்றிருக்கிறார்களா? என்று ஆராய்வதே.

இதற்கு mock drill என்று பெயர்.

விபத்து நடந்ததாக அறிவிக்கப்பட்ட எத்தனையாவது வினாடி தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தது? மயங்கிக் கிடந்த ஊழியர் கண்டுபிடிக்கப்பட்டுத் தகவல் தெரிவிக்கப்பட்ட எத்தனையாவது வினாடி மருத்துவ ஊர்தி வந்து சேர்ந்தது என்றெல்லாம் பார்ப்பார்கள். இதை response time என்பார்கள்.

5

மல்லிப்புதூரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகச் சொன்னேன் இல்லையா? ஏறத்தாழ முந்நூறு வீடுகள் உள்ள எங்கள் கிராமத்தில் கோவிந்தராஜன் என்ற தேநீர்க்கடை உரிமையாளர் அழைப்புந்து வைத்திருக்கிறார். எங்கள் உறவினர் ஒருவர் ஆட்டோ வைத்திருக்கிறார்.

இவர்கள் சவாரிக்கு ராஜபாளையத்துக்கோ சிவகாசிக்கோ போன நேரத்தில் எமன் யார் வீட்டுக் கதவையாவது தட்டினால் தப்பிக்கக் கால்களை நம்ப வேண்டும். அரசாங்கப் பேருந்துக்குக் குறுக்கே கைகாட்ட வேண்டுமென்றால் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிரதான சாலையைப் பிடிக்க வேண்டும்.

ஊருக்குள்ளேயே வரும் சிற்றுந்துகளின் கால அட்டவணையும் காலனின் அட்டவணையும் ஒத்துப் போகுமா என்று சொல்ல முடியாது.

யாரேனும் டக்கர் வண்டியைக் கொடுத்துதவினால்தான் உண்டு. Response time எவ்வளவு ஆகும்?

6

பத்து நிமிடம் முன் வரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ஒற்றைக்கொரு தவப்புதல்வனின் உடலைச் சுற்றியழும் பெற்றோர், எல்லோரும் பார்த்திருக்க எவராலும் காப்பாற்ற முடியாமல் தன்னைத் தானே தகனம் செய்துகொண்ட தாவணிப் பூ, கஞ்சியூற்றா மகனைப் பெற்றதால் வயிற்றிலும் நுரையீரல்களிலும் கிணற்று நீரை நிரப்பிக் கொண்ட தாய் என எத்தனையோ பட்டிக்காட்டு மரணங்கள் பார்த்திருக்கிறேன்.

பூச்சிக்கொல்லி அருந்தியவனை அது கொண்டுபோனதை விட வாயிலும் வயிற்றிலும் அடித்தலறி சரியான முதலுதவி செய்யத்தெரியாமல் இறுதிப்பயணத்துக்கு ஏற்பாடு செய்த கதைகளே அநேகம்.

செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அஸோசியேஷன் போன்ற அமைப்புகள் முதலுதவிப் பயிற்சி வகுப்புகளை கிராமங்களுக்கும் விரிவுபடுத்தினால் பத்துக்கு ஏழு மரணங்கள் ஒத்திவைக்கப்படும்.

7

ஜாம்நகர் தொழிற்சாலை நகரிய மருத்துவமனையொன்றில் அந்நிறுவன ஊழியர்கள் இருபதாயிரம் பேருக்கும் தனித்தனியே நோட்டுப்புத்தகம் போட்டு அவர்களின் ஆரோக்கிய வரலாறு பராமரிக்கப்படுகிறது.
கற்பனைப் பணி நியமன எண் 6789 ஐ அங்குள்ள கணிப்பொறியில் தட்டிப் பார்ப்போம்.
ராகேஷ் மேஸ்வானியின் மருத்துவக்குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.
செப்டெம்பர் 2006 இல் ஆலை வளாகத்தில் கந்தக அமிலம் இடக்கையில் பட்டு பனிக்கட்டி ஒத்தடம் தரப்பட்டதும் வலிமறக்கும் ஊசி போடப்பட்டு சில்வரெக்ஸ் களிம்பு தடவப்பட்டதும் பாரஃபின் எண்ணெய் வழங்கப்பட்டதும் பதிவாகியிருக்கின்றன. கடைசியாக 2007 ஆகஸ்டில் அவருடைய ரத்த அழுத்தம், உயர், குறைவடர்த்தி லிபோப்ரோட்டீன் அளவு, ட்ரைக்ளிசரைடுகள், காலை உணவுக்கு முந்தைய பிந்தைய சர்க்கரை அளவுகள் போன்ற குறிப்புகள் தெரிய வருகின்றன. அவருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.
இதை ஏன் கிராம சுகாதார நிலையங்களில் நடைமுறைப்படுத்தக் கூடாது?
ஒரே ஒரு கணிப்பொறி போதும். மல்லிப்புதூர் சுகாதார நிலையத்தோடு அருகிலிருக்கும் ஐந்து கிராமங்களை இணைத்துவிட்டால் போதும். போதிய மருத்துவ உபகரணங்களும் தொலைமருத்துவ சேவையும் இருந்தால் போதும். அவசரகாலத்துக்காக ஒரே ஒரு மருத்துவ ஊர்தி வாங்கினால் போதும்.
உயர்கல்வி பயிலும் அனுமதியோடு வேண்டிய வசதிகள் செய்துகொடுத்தால் மருத்துவரும் செவிலியும் 24 மணி நேரமும் இருக்கச் சம்மதிக்காமலா போய்விடுவார்கள்?
ஐந்து கிராமங்களில் சுமார் இரண்டாயிரம் வீடுகள். சராசரியாக வீட்டுக்கு நான்கு பேர் என்று வைத்துக் கொண்டால் எட்டாயிரம் பேர். இவர்களின் மருத்துவக் குறிப்புக்களைப் பாதுகாக்க முடியாதா என்ன? காய்ச்சல், மண்டையடி என்றால் மல்லிப்புதூரான் ஸ்ரீவில்லிபுத்தூருக்குத்தான் ஓட வேண்டுமா?
பொருளாதார வானிலையைப் பொறுத்தவரை உலகின் கோடையும் குளிரும் இந்தியாவை அதிகமாக பாதிக்காது என்றே கோட்டு சூட்டுப் போட்டவர்கள் சொல்கிறார்கள். வசந்தம் இனி நிரந்தரம். அதே சமயம் மனித வளர்ச்சிக் குறியீட்டில் (HDI) இந்தியாவின் இடம் என்ன?
அரசின் நல்ல பல திட்டங்கள் இன்னும் திறமையாகச் செயல்படுத்தப் படவேண்டுமா? வெட்கப்படாமல் தொழிற்துறையினரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். அவர்களையும் ஈடுபடுத்தலாம்.
உலகத்தரத்தில் மருத்துவசேவையை இளைத்த கட்டணத்துக்கு, முடிந்தால் இலவசமாக, மாயத்தேவன்பட்டியிலும் மாலூரணிப்பட்டியிலும் வழங்கமுடிந்தால் மத்திய மாநில அரசுகளின் சாதனை மகுடங்களில் மேலும் ஒரு வைரக்கல் பதிக்கப்படும்.

8

அதுவரை...

பெரிய டாக்டர்கள் முத்தாலம்மனும் மாரியம்மனும் இருக்கிறார்கள்.

-------------------------------------------------------------------------------------
சீனிராஜ் சிவகுமார்
14-மார்ச்-2008
-------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
நவீன கிராம நிர்வாகம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளும் விருப்பமிருந்தால் இவற்றைப் படித்துப் பார்க்கலாம்
1. புரா திட்டம்
2. அரசியலமைப்புச் சட்டத்தின் Art. 243, அதன் உட்பிரிவுகள். 73 ஆம் திருத்தம் மூலம் சேர்க்கப்பட்ட 29 அம்சப் பட்டியல்.
Best viewed with 1024 by 768 pixels resolution.© www.seenirajsiva.in , All rights reserved.
Home | Contact Us |